பாஜக-வின் நேரடி முகமாக ரஜினி செயல்படுகின்றார், மறைமுகமான முகமாக கமல் செயல்படுகின்றார் என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் கெளதமன் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,... "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக் கலவரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மனிதப் படுகொலைகள் நடந்துள்ளது. அதன் துயரத்தை தாங்க முடியாமல்தான் சென்னையில் போராட்டங்களை நடத்தினோம்.
தூத்துகுடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்றிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைத்திடவும், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் வேண்டுகோளை ஏற்றுதான் இந்த தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தத் தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகள் அனைத்துமே தங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில்கூட ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்றுவோம் என்பது பற்றி ஏன் பேசவில்லை என கேள்வியை எழுப்பினார். மேலும் தாங்கள் வடிவமைத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் முதலாவது கோரிக்கையே ஸ்டெர்லைட் ஆலையை மண்ணில் இருந்து அகற்றுவதுதான் எனவும், ஸ்டெர்லைட் மட்டுமல்லாது பனைத்தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர்களுக்காக 25 கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம், "மண்ணைக் காக்க ஒன்றாக இந்தத் தேர்தலை சந்திப்போம்" எனக் கேட்டதாகவும், அதற்கு, "நாம் தமிழர் கட்சியின் பலத்தையும், வாக்கு எண்ணிக்கையையும் இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டியதுள்ளது" என சீமான் கூட்டணிக்கு மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜக-வின் நேரடி முகமாக ரஜினி செயல்படுகின்றார், மறைமுகமான முகமாக கமல் செயல்படுகின்றார் எனவும் கௌதமன் குறிப்பிட்டு பேசினார்.