நீட் தேர்வை முதல்வர்கள் எதிர்க்க வேண்டும் என கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, மேற்கு வங்க முதல்வர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை!
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் பல கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என்றும் தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்டுள்ளது என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோமம், இந்த ஆண்டு பிரதீபாவை இழந்துள்ளோம். நீட் தேர்வால் இனி எத்தனை உயிர்கள் பலி ஆகப் பேகிறதோ என்றும் வருத்தத்துடன் கூறிய அவர், நீட் தேர்வை முதல்வர்கள் எதிர்க்க வேண்டும் என கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, மேற்கு வங்க முதல்வர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் அனைத்தும் இணைந்து நியாயமற்ற நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.