பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றிய நிலையில், இன்று டி20 தொடர் துவங்கியது.
டி20 தொடரின் முதல் போட்டி லாகூர் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணத்திலகா 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹஸ்னைன் 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அஸாம் 13 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய உமர் அக்மல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷஸாத்தும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 22 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் சற்று நிதானமா விளையாடி விக்கெட்டைப் பாதுகாத்தனர். ஆனால், இவர்களும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இஃப்திகார் அகமது 25 ரன்களுக்கும், சர்ஃபிராஸ் அகமது 24 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு, பாகிஸ்தான் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இதனால், அந்த அணி 17.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
இலங்கை அணியில் அரைசதம் அடித்த குணத்திலகா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.