இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிந்தது!

India National Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக வர யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 21, 2023, 01:00 PM IST
  • 2021ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
  • கடந்த நவ.19ஆம் தேதியோடு அவரது ஒப்பந்தம் காலவதியானது.
  • பிசிசிஐ இதுகுறித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிந்தது! title=

India National Cricket Team, Head Coach: ஒருநாள் போட்டிக்கான 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) இந்தியாவில் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (நவ.19) நிறைவு பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து என 10 அணிகள் இதில் மோதின. 

இதில் இறுதிப்போட்டி வரை தோல்வியே இல்லாமல் 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி (Team India), இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, கோப்பையை கோட்டைவிட்டது. ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக இருந்தாலும் இறுதிப்போட்டியில் சில தடுமாற்றங்களால் போட்டியை கைநழுவவிட்டது. 

குறிப்பாக, இந்திய அணியில் இதுதான் பலரின் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அஸ்வின் போன்றோர் அடுத்த தொடரில் விளையாட வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால் இந்த உலகக் கோப்பையை தவறவிட்டு சோகத்தில் ஆழ்ந்தனர். இதில், ரோஹித் சர்மா 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை என்பதால் இந்த தொடர் அவருக்கு முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது, ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 

அந்த வகையில், தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் (Rahul Dravid) கடைசி தொடர் இதுதான் என்ற பேச்சும் எழுந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் பயிற்சியாளர் ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுகிழமையுடன் (நவ. 19) நிறைவடைந்தது. தற்போது அவரை பிசிசிஐ மாற்றுமா அல்லது அவரையே தொடருமா என்பது கேள்விக்குறிதான் என்றாலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய நபர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தோனிக்கு இருந்த திருமண ராசி ரோஹித்துக்கு இல்லையா... கிளம்பும் புது கதை - என்ன தெரியுமா?

ஸ்டீபன் பிளெமிங்

நியூசிலாந்தின் மூத்த வீரர் ஸ்டீபன் பிளெமிங் (Stephen Fleming), இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான மிகப்பெரிய போட்டியாளராக கருதப்படுகிறார். ஸ்டீபன் பிளெமிங் உலக கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்துள்ளார் எனலாம். இவரின் பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புத்திசாலித்தனமான வியூகங்களை அமைப்பதில் வல்லவர் எனலாம். மேலும், இந்திய வீரர்களுடன் நல்ல பிணைப்பும் கொண்டவராக உள்ளார். பெரிய தொடர்களில் பெரிய போட்டிகளை எப்படி வெல்வது என்பது ஸ்டீபன் ஃப்ளெமிங்கிற்கு தெரியும். எனவே, அவர் பயிற்சியாளராக இருப்பதன் மூலம் இந்திய அணியின் நாக்-அவுட் தோல்வியை வரலாற்றை மாற்ற முடியும்.

டாம் மூடி

ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களில் ஒருவர் டாம் மூடி (Tom Moody). இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பதவி வகித்தவர். இவரின் பயிற்சியின் கீழ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி விண்ணப்பித்திருந்தார். பயிற்சியாளர் தேர்வில் ரவி சாஸ்திரிக்கு டாம் மூடி கடும் போட்டியை அளித்தார் என்பதை மறக்க முடியாது. ஆனால் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் விருப்பங்களை மனதில் வைத்து, சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு டாம் மூடி பெரும் போட்டியாளராக இருப்பார்.

ஆஷிஷ் நெஹ்ரா

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா (Ashish Nehra) ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வியூகவாதி என்பதை நம் அறிந்திருப்போம். ஆஷிஷ் நெஹ்ராவின் புத்திசாலித்தனமான மற்றும் அமைதியான மனநிலையால், இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக உள்ளார், மேலும் அவரது பயிற்சியின் கீழ் குஜராத் 2022ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார்.

வீரேந்திர சேவாக்

இந்திய அணியின் மூத்த வீரரும், சிறந்த பேட்டருமான வீரேந்திர சேவாக் (Virendar Sehwag), இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ஆவதற்கு மிகப்பெரிய போட்டியாளராக கருதப்படுகிறது. அவர் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில், வீரேந்திர சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் உலகம் முழுவதும் உள்ள பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வீரேந்திர சேவாக் வந்தால், அவர் இந்திய அணிக்கு ஒரு ஆக்ரோஷமான சிந்தனையை கொண்டு வருவார் எனலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் தரும் அதே ஆக்ரோஷ பாணியிலான அணுகுமுறையை சேவாக் இந்திய அணிக்கு வழங்க முடியும் என கருதலாம். இந்திய அணியின் பயிற்சியாளராக சேவாக் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இவங்க ஜோசியமே பொய்... கணிப்பு தெரிவித்த பிரபல ஜோதிடர்களை போட்டுத்தாக்கும் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News