Brydon Carse IPL Team: இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத இருக்கின்றன.
முதலில் டி20 தொடர் நடைபெறும் நிலையில், கொல்கத்தா மற்றும் சென்னையில் இரு டி20 போட்டிகள் இதுவரை நிறைவடைந்துள்ளன. ஜன. 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றது.
திணறிய இந்திய அணியின் பேட்டிங்
ஆனால், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்துவிடவில்லை. இந்திய அணிதான் டாஸை வென்று முதலில் பந்துவீசவும் செய்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்திய அணி 166 ரன்களை எளிதில் அடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாப் ஆர்டர் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. பவர்பிளேவிலேயே மூன்று விக்கெட்டுகளையும் இழந்தாலும் திலக் வர்மாவின் அதிரடியில் 59 ரன்களை இந்திய அணி எடுத்தது. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் பெரும் தடுமாற்றத்தை இந்திய அணி சந்தித்தது. ஒருகட்டத்தில், இந்திய அணி 78/5 என்ற ஸ்கோரில் இருந்தது.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங், மும்பை அணிக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம்..!
ஆட்ட நாயகன் திலக் வர்மா
ஆனால், கடைசி கட்டடத்தில் திலக் வர்மா மற்றும் ரவி பிஷ்னோயின் போராட்டத்தால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 55 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 72 ரன்களை அடித்தது மட்டுமின்றி, போட்டியில் வெற்றியையும் தேடி தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வானார். இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றாலும், நேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி, விக்கெட்டுகளை வாரி வழங்கியது.
அனைவரையும் கவர்ந்த பிரைடன் கார்ஸ்
ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆரம்ப கட்ட ஓவர்களில் தாக்குதல் தொடுக்க, பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன் ஆகியோர் மிடில் ஓவர்களில் இந்திய அணி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஓவர்டன் சிஎஸ்கே அணிக்கு விளையாட உள்ள நிலையில், சேப்பாக்கத்தில் நேற்று அவர் பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் பெரியளவில் உதவினார். அவர் வீசிய முதலிரண்டு ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்திருந்தார். ஆனால், இவர்களை விட நேற்று அனைவரையும் பெரிதும் கவர்ந்தவர் எனில் பிரைடன் கார்ஸ் தான்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 31 ரன்களை குவித்த அவர் துரதிருஷ்டவசமாக ரன்அவுட்டாகி வெளியேறினார். அவர் ஒருவேளை களத்தில் தொடர்ந்து விளையாடியிருந்தால் இந்திய அணிக்கு வெற்றி இன்னும் கடினமானதாக மாறியிருக்கும். வருண் சக்ரவர்த்தியையும் அவர் மிகச் சிறப்பாக கையாண்டார். பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி நான்கு ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.
எந்த ஐபிஎல் அணியில் பிரைடன் கார்ஸ்?
இந்திய மண்ணில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கலக்கும் இவர் எந்த ஐபிஎல் அணியில் விளையாடுகிறார் என்பதை பலரும் கேட்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம். வெளிநாட்டு ஆல்-ரவுண்டரான இவரை கடந்த மெகா ஏலத்தில் ரூ.1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் வாங்கியது.
அந்த அணிக்கு எக்கச்சக்க வெளிநாட்டு ஆப்ஷன்கள் இருந்தாலும் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள். அப்படியிருக்க அந்த அணியில் கமிந்து மெண்டிஸ், இஷான் மலிங்கா, ஆடம் ஸாம்பா ஆகியோருடன் இவரும் உள்ளார். எனவே, நேற்றைய ஆட்டத்திற்கு பின் சன்ரைசர்ஸ் அணிதான் மிகவும் ஹேப்பியாக இருக்கும் எனலாம்.
மேலும் படிக்க | ரோகித் சர்மா மீண்டும் சொதப்பல்..! அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் மோசமாக அவுட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ