Madha Gaja Raja Movie Review Tamil : பொதுவாக திரையுலகை பொருத்தவரை ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு படம், ஆரம்பத்தில் இருந்து தடைப்பட்டு போகிறது என்றால்,
அது ஒன்று ரிலீஸ் ஆகாமலேயே போய் விடும், அல்லது ரிலீஸிற்கு பிறகு அப்படம் பெரிய வெற்றி பெறாது என்பதுதான். அப்படி, 12 வருட காலமாக ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு படம்தான் மத கஜ ராஜா. சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம், நன்றாக இருக்கிறதா இல்லையா? முழு விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
ஒருவரிக்கதை:
நண்பர்களின் பிரச்சனையை தன் பிரச்சனையாக நினைத்து, வில்லனை எதிர்க்கும் ஹீரோ. இறுதியில் வெற்றி யாருக்கு? இவ்வளவுதாங்க படத்தின் கதை.
கொஞ்சம் விளாவாரியான கதை:
காவல் அதிகாரியின் மகனாக வலம் வரும் மத கஜ ராஜா (விஷால்), கேபிள் டிவி வைத்திருப்பவராக இருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே அஞ்சலியும் இவரும் சந்திக்க, பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அஞ்சலிக்கு விஷாலால் அவமானம் ஏற்பட, இருவரும் பிரிய நேர்கிறது. இதற்கு சில வருடங்கள் கழித்து டிராவல் ஆகும் கதையில், விஷால் தனது முன்னாள் ஆசிரியர் மகளின் திருமண விழாவில் நண்பர்களை சந்திக்கிறார். அங்கு, அவரது 2 நண்பர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் 2 பெரிய பிரச்சனை இருப்பதை கூற, அந்த இரண்டு பிரச்சனைக்கு காரணமாக ஒரு பெரும் புள்ளி (சோனு சூட்) இருப்பதை கண்டு பிடிக்கின்றனர். நண்பர்களுக்காக, வில்லனை ஒற்றை ஆளாக எதிர்க்க சென்னை வருகிறார் ஹீரோ. வந்த இடத்தில் பிரிந்து சென்ற அஞ்சலியையும் கண்டுபிடிக்கிறார். இதற்கடுத்து என்ன நடந்தது? வில்லனை அழித்தாரா? அஞ்சலியுடன் சேர்ந்தாரா? என்பதை காமெடியாக சொல்கிறது மீதி கதை.
கலகலவென சிரிக்கலாம்!
மேற்கூறியது போலவே, படத்தில் கூறுவதற்கு சீரியஸான கதையோ அல்லது திருப்பமோ இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி கலகலவென சிரிக்க வைக்கும் அளவிற்கு காமெடி வசனங்களை அள்ளி தெளித்திருக்கின்றனர். அது நாம் முன்கூட்டிய கணிக்க முடியும் காமெடியாக இருந்தாலும், ஸ்கிரீனில் பார்க்கும் போது நம்மையே அறியாமல் சிரிப்பு மத்தாப்பு வெடிக்கிறது. அதிலும் நண்பர்களுடன் சென்றால் ஜாலியாக படத்தை ரசிக்கலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களை அல்லது அதன் காமெடி காட்சிகளை ஏதேனும் ஒரு சேனலில் பார்க்கும் போது மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி ததும்பும். அப்படிப்பட்ட ஒரு உணர்வை அளிக்கிறது மத கஜ ராஜா திரைப்படம். காரணம், இப்போது வரும் பல படங்களில் சிரிப்பு வரவழைக்க வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக சில காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அவை பார்ப்பதற்கு யதார்த்தமாக இருக்காது. ஆனால், 10-12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களின் கதை வேறு. ஒரு வேளை மத கஜ ராஜா படம் அந்த வகையை சேர்ந்தது என்பதால் மகிழ்வான ஒரு உணர்வை தருகிறது போலும்.
அந்த சந்தானத்தை ரொம்ப மிஸ் பண்றோம்..
நடிகர் சந்தானம், “இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்” என்று கூறி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் இவரது கவுன்டர் காமெடிகளை பார்க்க முடிந்தாலும், ஹீரோவுடன் சேர்ந்து, ஹீரோவையே கலாய்த்து அவர் பேசியிருந்த காட்சிகளை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த குறைக்கு கொஞ்சம் மருந்து போடும் வகையில் வெளிவந்துள்ளது மத கஜ ராஜா படம். இவரது டைமிங் காமெடி, ரைமிங்கில் பேசி கலாய்ப்பது என பழைய சந்தானத்தை திரையில் பார்க்கவே அத்தனை ஆனந்தமாக உள்ளது. விஷாலுக்காக இந்த படத்தை பார்க்கிறோமோ இல்லையோ, சந்தானத்திற்காக இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
சுந்தர்.சி திருந்துவது எப்போது?
மத கஜ ராஜா படம் உருவாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. இந்த படம் உருவான போது இருந்த உலகம் இப்போது இல்லை. ஆனால், அப்போது முதல் இப்போது வரை, தன் பெண்களை காட்சி பொருளாக மாற்றுவதற்கு மட்டும் சுந்தர்.சி தவறுவதே இல்லை. தொப்புள் தெரிய தாவணி கட்டியிருக்கும் பெண்ணை வேண்டுமென்றே ஓட விடுவது, ஈரத்துணியுடன் இருக்கும் ஹீரோயினை ஹீரோவுடன் நடனமாட வைப்பது, டைட் ஆக ஆடை அணிவித்து, நாயகியை யோகா செய்ய வைப்பது போன்ற விஷயங்களை அவர் இந்த படத்திலும் செய்ய தவறவில்லை. எப்போதும் போல கடைசியில் க்ளைமேக்ஸிற்கு பிறகு ஒரு ஐட்டம் பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இது போன்ற காட்சிகளை பார்க்கும் வேளையில் படம் பார்க்கும் பெண்கள், உச் கொட்டிக்கொண்டே “இவர் திருந்துவது எப்போது?” என்று கேட்காமல் கேட்கும் கேள்வியை காதால் கேட்க முடிகிறது. உருவ கேலிக்கும் படத்தில் பஞ்சம் இல்லை.
விஜய் ஆண்டனி நஹி-வைப் ஆண்டனி போலோ!
இப்போது ஹீரோவாக வலம் வரும் விஜய் ஆண்டனி, மத கஜ ராஜா படம் உருவான சமயத்தில் வெறும் மியூசிக் மட்டும் போட்டுக்கொண்டிருந்தார் என்பது பின்னணி இசையிலேயே பளிச்சென தெரிகிறது. மை டியர் லவ்வரு பாடலிற்கும், சிக்கு புக்கு பாடலிற்கும் வைப் செய்வதற்காகவே படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என சொல்ல வைக்கிறது இவரது துள்ளள் இசை. ஆனால் இவரது தற்போதைய படங்களில் இந்த மேஜிக்கை மிஸ் செய்வது, கொஞ்சம் வருத்தமளிக்கிறது.
மொத்தத்தில்..
இரண்டரை மணி நேரம், உங்கள் கவலைகளை மறந்து, வாய் விட்டு சிரித்து, மகிழ்ச்சியாக ஒரு படம் பார்க்க விரும்பினால், கண்டிப்பாக நண்பர்களுடன் சென்று இந்த படத்தை தியேட்டரில் பாருங்கள்.
பின்குறிப்பு: படத்தில் எந்தவித லாஜிக்கையும் எதிர்பார்க்காமல் தியேட்டருக்கு செல்லுங்கள்.
மேலும் படிக்க | பாலாவின் வணங்கான் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ