காங்கிரஸ் கட்சியின் ஆணவம், அகங்காரத்துக்கு இந்தத் தேர்தலில் மரண அடி காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தொழில்நுட்ப ஆலோசராக இருந்த சாம் பிட்ரோடா, சீக்கியர்களுக்கு எதிராக 1984 -இல் நடைபெற்ற கலவரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கூறிய கருத்துகளை மேற்கோள்காட்டி, பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 1984 - ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து, வடமாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக பெரிய அளவில் கலவரம் மூண்டது. டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வெடித்த வன்முறையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து, ராஜீவ் காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகராக இந்த சாம் பிட்ரோடா ,"ஆமாம்... நடந்தது நடத்துவிட்டது? இப்போது அதற்கென்ன? " என சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறும்போது, " ஒரு பெரிய மரம் முறிந்து விழும்போது, நிலத்தில் அதிர்வு இருக்கதான் செய்யும்" என அலட்சியமாக கூறியிருந்தார். பஞ்சாபில் சீக்கிய கலவரங்களை முன்நின்று நடத்திய கமல்நாத்தை, மத்தியப் பிரதேச மாநில முதல்வராக்கி காங்கிரஸ் அழகு பார்த்து வருகிறது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, பல ஆண்டுகளாக காங்கிரஸ் இப்படிதான் அணுகி வருகிறது.
தற்போது, இந்த விவகாரம் தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்தையும் தனி ஒருவரின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் அவர், ராஜீவ் காந்தி தொடங்கிய ராகுல் காந்தி வரை, அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.
சீக்கியர்கள் படுகொலை குறித்த காங்கிரஸ் கட்சியின் மனநிலையை தான் பிட்ரோடா இன்ற வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸின் இந்த ஆணவம், அகங்காரத்துக்கு இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு மரண அடி காத்திருக்கிறது. அதாவது கடந்தமுறை 44 சீட்களை வென்ற காங்கிரஸுக்கு இந்த முறை அந்த இடங்கள் கூட அக்கட்சிக்கு கிடைக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.