30 வருடங்கள் பத்திரிக்கையாளராக இருந்து தற்போது சினிமாவில் நடித்து வருகிறார் நடிகர் மை. பா. நாராயணன். பல பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார்.
அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய, உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர் வளர்ந்து வரும் நடிகர் மை. பா. நாராயணன்.
அண்மையில் வெளிவந்த 'வணங்கான்' படத்தில் வழக்கறிஞராக கவனிக்கத்தக்க வகையில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் மை. பா. நாராயணன். இதற்கு முன்பு பாலாவின், 'நாச்சியார்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட 13 படங்களில் நடித்துள்ளார்.
மை.பா. நாராயணன் ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். இந்தத் துறையில் அவருக்கு 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. ஊடக விளம்பரத் துறையிலும் ஈடுபட்டவர், ஒரு பத்திரிகையாளராக கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களையும் பிரமுகர்களையும் நேர்காணல் செய்துள்ளார்.
தனது திரையுலக அனுபவம் குறித்துப் பேசும்போது,"எனது திரை உலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தம்பி ராஜுமுருகன் தான். அவரது 'ஜோக்கர்' படம் தான் எனக்கு முதல் படம். பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று', அதற்குப் பிறகு அண்ணன் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் நடித்தேன்.
தலயின் 'நேர்கொண்ட பார்வை'யில் நடித்தேன். பிறகு பெரிய வெற்றிப்படமான 'இறுகப்பற்று', துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் 'கலகத் தலைவன்', 'பொம்மை நாயகி' என 13 படங்களில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அண்ணன் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' வந்துள்ளது.
பல அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பிரமுகர்களிடமும் எனக்கு நட்பான தொடர்பு உண்டு. அவர்கள் அனைவரது அன்புக்கும் பாத்திரமானவனாக நான் இருக்கிறேன். அதுவே எனது வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய உதவுகிறது.
அறம் கோபியின் புதிய படத்திலும், வ.கௌதமனின் காடுவெட்டி குரு கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் புதிய படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் இரண்டு புதிய படங்களும் வந்துள்ளன" இவ்வாறு மை.பா.நாராயணன் கூறினார்.