Delhi Election Result 2025: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அதாவது இன்று வெளிவரும். இதற்கிடையில், கருத்துக்கணிப்புகள் அனைத்து கட்சிகளையும் மூச்சுத் திணற வைத்துள்ளன என்றே கூறலாம். ஆம் ஆத்மி கட்சி (AAP) இந்த முறையும் தொடர்ந்து டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து (BJP) கடுமையான சவாலை ஆம் ஆத்மி கட்சி எதிர்கொள்கிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி எதிர்ப்பு அலையைச் சமாளிக்க போதுமான அளவு செயல்பட்டுள்ளதா அல்லது பாஜகவின் முழு வீச்சு பிரச்சாரம் வெற்றி பெற்றதா என்பது தெளிவாகிவிடும்.
ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக -வுக்கு இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், முடிவைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகள் சில உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாக்குப் பங்கு மிகப்பெரிய காரணியாக இருக்கும்
1993 ஆம் ஆண்டு, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது முதல் மற்றும் ஒரே வெற்றியைப் பதிவு செய்தது. அந்த நேரத்தில் அதன் வாக்குப் பங்கு 30-40 சதவீதமாக இருந்தது. இதன் பின்னர், 1998 முதல் 2008 வரை பாஜக காங்கிரசுக்குப் பின்னால் இருந்தது. பின்னர் 2013 இல் தொங்கு சட்டமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டது. இதற்குப் பிறகு, அது 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியை விட பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.
2015 ஆம் ஆண்டில் பாஜக 32.19 சதவீத வாக்குகளையும், 2020 ஆம் ஆண்டில் 38.51 சதவீத வாக்குகளையும் பெற்றது. இரண்டு தேர்தல்களிலும் பாஜகவின் வாக்குப் பங்கு அதிகரித்தது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குப் பங்கு நிலையாக இருந்தது. 2015 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 54.34 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டில், அது 53.57 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன் காரணமாக, 2015 உடன் ஒப்பிடும்போது 2020 இல் ஆம் ஆத்மி 5 இடங்களை இழந்தது. இத்தகைய சூழ்நிலையில், இந்த தேர்தலில் வாக்குப் பங்கு (Vote Share) மிக மிகவும் முக்கியமானதாகிவிட்டது.
நடுத்தர வர்க்கத்தினரின் வாக்கு
இந்த டெல்லி தேர்தலில் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியின்படி, ஆம் ஆத்மி கட்சி 'ஏழைகளின் கட்சி' என்று மட்டுமே பார்க்கப்படுகிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. எனவே நடுத்தர வர்க்கத்தினரை கவரும் வகையில் 2025-26 மத்திய பட்ஜெட்டிற்கான பல கோரிக்கைகளுடன் 'நடுத்தர வர்க்க அறிக்கையை' வெளியிட்டுள்ளது. இருப்பினும், பாஜக நடுத்தர வர்க்கத்தினரையும் குறிவைத்து செயல்படுகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி அரசு 3.0 இன் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர வர்க்கத்தினரை மனதில் கொண்டு பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பும் இதில் அடங்கும். டெல்லியின் மக்கள் தொகையில் 67.16 சதவீதம் அல்லது 28.26 லட்சம் வீடுகள் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளதாக இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் 2022 பற்றிய மக்கள் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், நடுத்தர வர்க்க வாக்குகள் முழுமையாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இருந்தன. இந்த முறை, நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளைப் பெறுபவர் அரசாங்கத்தை அமைப்பது உறுதி.
பெண்களுக்கு முக்கியத்துவம்
நாடு முழுவதும், பெண்கள் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்ட ஒரு முக்கியமான வாக்குத் தளமாக உருவெடுத்துள்ளனர். சமீபத்தில், மகாராஷ்டிராவில் பெண்களுக்கான லட்கி பெஹென் யோஜனாவின் புகழ் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர உதவியது. 2020 தேர்தலில், பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறை பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் புதிய திட்டங்களுடன் பெண் வாக்காளர்களை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு ரூ.2,100 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி மாதம் ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்துள்ளன. இது தவிர, பெண்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள், சிறந்த ஓய்வூதியம் மற்றும் பிற சுகாதாரம் தொடர்பான திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
டெல்லியில் 72.36 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இருப்பினும், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. 2015 இல் இது 67.13% ஆக இருந்தது. இந்த முறை இந்த சதவிகிதம் 60.52% ஆகக் குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி 53% பெண் வாக்குகளைப் பெற்றதாகவும், பாஜக 34% பெண் வாக்குகளைப் பெற்றதாகவும் CSDS கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு வாக்கில், பெண்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குப் பங்கு 60% ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் பாஜக 35% வாக்குகளைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால், அக்கட்சிக்கு பெண்களின் வாக்குகள் மிக அவசியம்.
தலித் வாக்கு வங்கி
கடந்த தேர்தல்களில், டெல்லியின் 12 எஸ்சி-ஒதுக்கீட்டு இடங்களை முதலில் காங்கிரஸும் பின்னர் ஆம் ஆத்மியும் கைப்பற்றின. 1993 ஆம் ஆண்டு எட்டு எஸ்சி இடங்களை வென்றதிலிருந்து, பாஜக இரண்டு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மேல் வென்றதில்லை. எஸ்சி இடங்களில் அதன் வாக்குப் பங்கும் 1993 ஆம் ஆண்டு பெற்ற 36.84% ஐ விடக் குறைவாகவே உள்ளது. 1998 மற்றும் 2008 க்கு இடையில், காங்கிரஸ் பெரும்பாலான எஸ்சி இடங்களை வென்றது. 2013 முதல் இந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வாக்குப் பங்கைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பல தேர்தல்களில் இந்த இடங்களில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடிந்தது. இந்த முறையும் இது தொடரும் என இரு கட்சிகளும் எதிர்பார்க்கின்றன.
எனினும், இந்தத் தேர்தலில், டெல்லியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மற்றும் சந்திரசேகர் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) போன்ற தலித் சார்ந்த கட்சிகளும் களத்தில் உள்ளன. இதன் காரணமாக இந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கம் குறையக்கூடும். இந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குப் பங்கில் காங்கிரஸ் கட்சியும்
சிறுபான்மை வாக்குகள்
டெல்லியில் பல இடங்களில் முஸ்லிம் வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக, சிறுபான்மை வாக்குகளும் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம். குறிப்பாக வடகிழக்கு மற்றும் மத்திய டெல்லி மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். டெல்லி மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 12.9 சதவீதம். வடகிழக்கு டெல்லியில் அவர்களின் பங்கு 29.3 சதவீதமாகவும், மத்திய டெல்லியில் 33.4 சதவீதமாகவும் உள்ளது. டெல்லியில் 10க்கும் குறைவான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட 23 இடங்கள் உள்ளன. 2015 மற்றும் 2020 க்கு இடையில், இந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குப் பங்கு சுமார் 55 சதவீதமாக நிலையானதாக இருந்தது. அதே நேரத்தில், பாஜகவின் வாக்குப் பங்கு 29.44%-34.57% ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் வாக்குகளைப் பொறுத்தவரை, அது 2020 இல் 12.81 சதவீதத்திலிருந்து 5.57 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனினும், இந்த 23 இடங்களில் 20 இடங்களில், 2015 மற்றும் 2020 க்கு இடையில் பாஜக தனது வாக்குப் பங்கில் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஒன்பது இடங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குப் பங்கு குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான போட்டி காரணமாக, இந்தப் பிரிவினரின் வாக்குகள் பிரிவதால் பாஜக பயனடையக்கூடும். இதுமட்டுமின்றி இரண்டு இடங்களில் AIMIM போட்டி இடுவதால், வாக்குகள் மேலும் பிரிக்கப்படுவதற்கான வய்ப்புகள் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ