டெல்லி மாசுபாட்டினை யாரும் அரசியல் ஆக்க முயற்சிக்க கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
தலைநகர் டெல்லி தற்போது சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.
டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) ஞாயிற்றுக்கிழமை காலை 10:45 மணிக்கு 626 ஆக பதிவாகியிருந்தாலும், தேசிய தலைநகரின் சில பகுதிகளில், மாசு அளவு 'அதிர்ச்சியூட்டும்' 900 மதிப்பெண்ணை மீறியது. டெல்லி விமான நிலையத்தில் காற்றின் தரம் 662, மதுரா சாலையில் 591, சாந்தினி சௌக்கில் 428, லோதி சாலையில் 662 என பதிவு செய்யப்பட்டுள்ளது. நொய்டா மற்றும் குருகிராமில், AQI முறையே 662 மற்றும் 737-ஆக உயர்ந்தது. ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு குருகிராம் மற்றும் கௌதம் புத் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 5-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் மோசமான காற்று நிலை குறித்து மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., "அனைத்து நிபுணர்களும் விவசாய கழிவு எரிப்பிலிருந்து மாசுபாடு டெல்லிக்கு வருவதாகக் கூறுகிறார்கள், இதன் காரணமாக எல்லா இடங்களிலும் மாசுபாடு உள்ளது. நாங்கள் எந்த விளையாட்டையும் பழி சொல்ல விரும்பவில்லை, டெல்லியில் இந்த நிலையினை அரசியலாக்க கூடாது. அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும்." என கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் நிலவும் மாசுவினை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக நாளை முதல் ஒற்றைபடை - சமான வாகன எண் விதி நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. டெல்லி முதல்வரின் இன்றைய அறிவிப்பில் இத்திட்டத்தின் செயல்முறை, முக்கியத்தும் குறித்த கருத்துக்களும் இடம்பெற்றது.