12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய பென்ஷன் திட் டத்தை கைவிட வேண்டும், சம்பள உயர்வு, தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி. யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.சி.டி.யூ., சேவா, டி.யூ., சி.சி, எல்.பி.எப்., யூ.டி.யூ.சி. ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் மாநில தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அரியானா உள்பட சில மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓட வில்லை. தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் அரசு பஸ்கள் ஓடவில்லை. குறிப்பிட்ட அளவிலான பஸ்கள் மட்டும் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் முடங்கி உள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகம்:-
தமிழகத்தில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி. யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.சி.டி.யூ., சேவா, டி.யூ., சி.சி, எல்.பி.எப்., யூ.டி.யூ.சி. ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும், எம்.எல்.எப்., விடுதலை சிறுத்தை தொழிலாளர் சங்கம், திராவிடர் தொழிலாளர் சங்கம், உழைக்கும் மக்கள் சங்கம் ஆகிய நான்கு தமிழக தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகத்தில் வழக்கம் போல பஸ் மற்றும் ரெயில்கள், ஆட்டோக்கள் இயங்கின. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. சில இடங்களில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பஸ்களை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெங்களூரு:-
பெங்களூரில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .பெங்களூருவில் வேலைநிறுத்ததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெங்களூருவில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டன. கடைகளும் பெரும்பாலும் மூடியே காணப்படுகின்றன.
உத்திரப்பிரதேசம்:-
உத்திரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் வாரனாசியில் ரோடு வேஸ் தொழிலாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளா:-
கேரளாவில் முழுவீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையம் வந்தவர்கள் அவதிக்கு ஆளாகினர். தனியார் வாகனங்கள் ஒன்றிரண்டு இயங்குகின்றன. சில நகரங்களில் ஏ.டி.எம் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள் வேலைக்கு வராததால் தனி நபர்களுக்கு வருவாய் இழப்பு உள்பட பல்வேறு பாதிப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்காளம்:-
மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே விடுத்த கடும் எச்சரிக்கை காரணமாக அம்மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வில்லை. மேற்கு வங்காளத்தில் இன்று அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின. அரசு அலுவலகங்களும் வழக்கம் போல இயங்கின.