கொரோனா பரவுதல் தீவிரத்தால் நாடு முழுவதும் மருத்துவ ஊழியர்களை தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்தவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணி அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
அவ்வாறு மாநில மற்றும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகளின் தொகுப்பு கீழே பட்டியலிடப்பட்டுள்ளது...
ஒடிசா அரசாங்கம் புதன்கிழமை ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒரு பெரிய ஆட்சேர்ப்பு முகாமை தொடங்கியது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் சேர லாபகரமான ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
COVID-19 உலகளாவிய தொற்றுநோயுடன் தொடர்புடைய அவசரநிலைகளை கருத்தில் கொண்டு மருத்துவ பயிற்சியாளர்கள் பதவிகளை பூர்த்தி செய்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வடகிழக்கு எல்லை ரயில்வே வெளியிட்டுள்ளது. மத்திய மருத்துவமனை / மாலிகான், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கீழ் உள்ள குவாஹாட்டி பகுதியில் மருத்துவர்களுக்கான ஆட்சேர்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் அரசு செவ்வாய்க்கிழமை 11 மாத ஒப்பந்தத்தில் மருத்துவர்களை பணியமர்த்த ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1,508 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், 500 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்களுக்கு உடனடியாக சேர தமிழ்நாடு அரசு நியமனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சுகாதாரத் துறை தனது அவசர படையில் 200 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை இணைத்துள்ளது.
மேற்கு ரயில்வே மருத்துவர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020-னை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஆர்வமுள்ள மற்றும் தகுதியான அனைத்து வேட்பாளர்களும் ஏப்ரல் 7, 2020 அன்று திட்டமிடப்பட்டுள்ள வாக்-இன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூத்த குடியிருப்பாளர்கள், மூத்த மருத்துவ அதிகாரிகள் (அவசரகாலத்தில் விபத்து) மற்றும் பல்வேறு பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு PGIMER இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது மருத்துவர்களுக்கான தேடுதல் வேட்டையினை அதிகரிக்க செய்துள்ளது. உலகளவில் சுமார் 10 லட்சத்து 40 ஆயிரம் பேரை பாதித்துள்ள கொரோனாவிற்கு இதுவரை 55 ஆயிரம் பேர் உயிர் விட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2800-ஆகவும், பலி எண்ணிக்கை 75-ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவரகளின் தேவையும் தேசத்தில் அதிகரித்துள்ளது.