நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதால், உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். உடலுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களையும் ஆற்றலையும் கொடுப்பது நாம் உண்ணும் உணவு என்பதால் நமது உணவு பழக்கங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
சைவம் அசைவம் என எந்த உணவாக இருந்தாலும், அதிலுள்ள ஊட்டச்சத்து மதிப்புகளே, அவற்றின் சுவையை விட அதிகம் பேசப்படவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெளியில் செல்லும் போது விருந்துக்கும், ருசிக்கும் உண்ணும் உணவுகள் ஒருபுறம் என்றால், அறுசுவைகளில் அதிகம் விரும்பப்படாத ஆனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளின் சுவை எதுவாக இருந்தாலும், அவற்றை வீட்டில் சமைத்து உண்பது ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதனால் தான், வீட்டு வைத்தியம், நாட்டு மருத்துவம், உணவே மருந்து என பல வார்த்தைகள் அடிக்கடி கேட்கிறோம்.
அந்த வகையில், வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் திறன் கொண்ட மணத்தக்காளி மற்றும் அதன் கீரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மணத்தக்காளி என்பது, வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் கீரையாக இருக்கிறது. இந்தக் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | எச்சரிக்கை! நுரையீரல் ரொம்ப வீக்கா இருப்பதை உணர்த்தும் ‘சில’ அறிகுறிகள்!
மணத்தக்காளி பழங்களை நன்றாக உலர வைத்து வற்றலாகவும் பயன்படுத்தலாம். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணத்தக்காளி வற்றல் சிறந்த மருந்து. பசியை அதிகரித்து உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கும். காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.
நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் மணத்தக்காளி பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும் தன்மை கொண்டது மணத்தக்காளி.
மணத்தக்காளியை எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
புண்களை போக்கும் மணத்தக்காளி
வாய்ப்புண் இருந்தால், மணத்தக்காளி இலையைப் பிழிந்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும். வாய்க் கொப்பளிக்கவும் மணத்தக்காளி நீரைப் பயன்படுத்தலாம் என நாட்டு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மணத்தக்காளி கூட்டு
மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் இந்த கூட்டு, சுவையானது. மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, சூடு தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்தி வந்தால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் .
பசியைத் தூண்டும் கீரை
நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டாலும் அதைப் போக்கும் வல்லமையும் மணத்தக்காளிக்கு உண்டு. தாகத்தை தணிக்க மணத்தக்காளி பழம் உதவும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும், மலத்தை இளக்கவும், பசியைத் தூண்டவும் மணத்தக்காளி பழத்தைப் பயன்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சோம்பலில்லாம இருக்க உதவும் சேப்பக்கிழங்கு கீரை! அழகாய் உடலை ஒல்லியாக்கும் உணவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ