மதுரை திருப்பங்குன்றம் மலை மீது காசிவிஸ்வநாதர் ஆலயம் மற்றும் சிக்கந்தர் தர்க்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்க்காவில் கந்தூரி விழா நடத்த அனுமதி கேட்டு இஸ்லாமியர்கள் முறையிட்டனர். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், அவர்கள் போராட்டம் நடத்தினர். உடனடியாக இந்து அமைப்புகள் கந்தூரி விழா நடத்த அனுமதிக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் இப்போது பூதாகரமாகியுள்ளது. இந்து முன்னணி சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் இந்து அமைப்புகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனை என்ன?
முருகப் பெருமானின் படை வீடுகளில் ஒன்று மதுரை, திருப்பரங்குன்றம். அங்கிருக்கும் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உடனே இந்து அமைப்புகளும் அங்கு போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் உருவாகியது. இதனால் மலை எந்த சமூகத்துக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மலைக்கு நேரில் சென்றார்.
உடனே அவர் மலைக்கு சென்று அசைவம் சாப்பிட்டார் என புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியது. நவாஸ்கனி எம்பி மறுப்பு தெரிவித்த நிலையில் இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக இது குறித்து பல செய்திகளை வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பினர். இது ஒருபுறம் சர்ச்சையான நிலையில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க பிப்ரவரி 4 ஆம் தேதி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக திருமங்கலம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் கோயில் நிர்வாகத்தையும், தர்கா நிர்வாகத்தையும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள மாற்று மத வழிபாட்டு தலத்தில் கந்தூரி நேர் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அந்த அமைப்புகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இதேபோல் மலை உச்சியில் உள்ள கல்தூணில் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் என சில அமைப்புகள் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் இரு பிரிவினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு மத ரீதியான பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் தடையை மீறி இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என அந்த அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில், மதுரை மாநகரில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூடம் நடத்த மாநகர் காவல் ஆணையரின் தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என ரகசிய தகவல் வந்திருப்க்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் ஆர்ப்பாட்டத்துக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறை கொடுத்துள்ள அந்த அறிவுறுத்தலில் “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக இரு வேறு பிரிவினர் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டும், அதனால் இரு பிரிவினர்களை சேர்ந்தவர்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இரு பிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்த முன்னணி சார்பில் பிப். 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவரம் தெரிந்தும் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும், தண்டோராக்கள் போட்டும் திருப்பரங்குன்றத்துக்கு அதிகளவில் பொதுமக்களை திரட்டும் செயல்களில் இந்து முன்னணி இயக்கத்தினர் ஈடுபட்டு வருவது தெரிகிறது. திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கை பாராமரிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். மீறி வருபவர்கள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் சட்டப்படியான எடுக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிறப்பித்துள்ள உத்தரவில், வருகின்ற 4-2-2025 அன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்:
இதனால் இந்து மற்றும் இசுலாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 பணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு , பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம்
மேலும் படிக்க | மதுரையில் விஜய் தவெக கட்சியில் இணைந்த வெற்றிமாறன்? உண்மை என்ன?
மேலும் படிக்க | பத்திரப்பதிவு துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசு... ஒரே நாளில் இவ்வளவு வருமானமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ