கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தக் கொலை ஏன் எதற்காக நடைபெற்றது, இதில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள பெட்ரோல் நிலயைங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயமடைந்த காவலாளி கிஷன்பகதூர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டரில் வரைப்படம் வரைந்து அதனை நேற்று போலீசார் வெளியிட்டனர்.
இந்நிலையில், நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் இந்த கொலையில் சிக்கியுள்ளனர். தற்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கூடலூர் அழைத்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து செல்லவும் திட்டமிட்டிருந்தனர். இப்படி இந்தக் கொலை விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருக்க, முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இன்று திடீரென விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.