சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல், தொற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது:-
பன்றி காய்ச்சல் பருவ காலங்களில் காணப்படும். குணப்படுத்தக்கூடிய சாதாரண புளு காய்ச்சல். தமிழ்நாட்டில் இந்த காய்ச்சல் வராமல் தடுக்கவும், இதனால் இறப்புகள் ஏற்படக்கூடாது என்ற வகையிலும் அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த காரணத்தால் அனைத்து காய்ச்சலும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டால் பன்றி காய்ச்சலை குணப்படுத்தலாம். 11,14,000 டாமிபுளு மாத்திரைகள், 31,272 டாமிபுளு சிரப், 10,649 மருத்துவ பாதுகாப்பு கவசங்கள், 30,681 எண்.95 பாதுகாப்பு முக கவசங்கள் மற்றும் 3,00,000 மூன்று அடுக்கு முக கவசங்களும் கையிருப்பில் உள்ளன.
பன்றிக்காய்ச்சலைக் கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக, கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் உட்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் 13 தனியார் ஆய்வு மையங்களும் செயல்படுகின்றன. அரசு மருத்துவ நிலையங்களில் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
காய்ச்சல் தொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வருகின்றன.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பன்றி காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையில் இந்த நோயை கண்டறிந்து மருந்து உட்கொண்டால் இறப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி எந்த வகையான காய்ச்சல் என உறுதி செய்ய வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். சுயமாக மருந்துகள் உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மருந்து கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் இடையே அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.
இதுதொடர்பாக தகவல் பெற 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் தகவல் மையம் செயல்படுகிறது.
044-24350496, 24334811, 94443 40496, 93614 82899 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். மேலும் தகவல்கள் பெற 104 சேவையையும் பயன்படுத்தி கொள்ளவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.