முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்!!
முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் இன்று காலமானார். அவரது வயது 95. உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள தனது வீட்டில் அவர் இன்று காலை காலமானார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் சிக்கார்பூரில் பிறந்த ராம் ஜெத்மலானி சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அதன்பிறகு, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இந்திரகாந்தி, ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய சட்ட நிபுணரான ராம் ஜெத்மலானி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட வழக்குகளிலும் வாதாடியுள்ளார்.
இவரின் மறைவுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலினின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; ’பல்வேறு நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ராம் ஜெத்மலானி. வழக்கறிஞர் தொழிலில் பவளவிழா கண்டவர். கருணாநிதியிடம் நெருக்கமான நட்பும், ஆழ்ந்த நேசமும் கொண்டிருந்தவர். ராம் ஜெத்மலானியின் மறைவு சட்ட அறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும், ஜன நாயகத்தின் மீது பற்று கொண்டோருக்கும் பேரிழப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.