அண்ணாமலை vs நயினார் நாகேந்திரன் ; தமிழக பாஜகவில் முற்றும் கோஷ்டி மோதல் - பிண்ணனி என்ன?

Annamalai | தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மோதல் உட்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியை பிடிக்க பலரும் முயற்சிக்கும் சூழலில் அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன் உட்கட்சி கோஷ்டி பூசலை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2025, 03:44 PM IST
  • அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மோதல்
  • தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு குறி
  • டெல்லி மேலிடம் எடுக்கப்போகும் அதிரடி முடிவு
அண்ணாமலை vs நயினார் நாகேந்திரன் ; தமிழக பாஜகவில் முற்றும் கோஷ்டி மோதல் - பிண்ணனி என்ன? title=

Annamalai vs Nainar Nagendran | தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் உக்கிரமாகிக் கொண்டிருக்கிறது. மாநில தலைவர் பதவியை குறி வைத்து கடந்த ஒருவருடமாகவே அக்கட்சிக்குள் மூத்த தலைவர்கள் காய்களை அதிரடியாக நகர்த்தி வருகின்றனர். அண்ணாமலை இடத்தை பிடிக்க தமிழிசை சவுந்திர ராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இது அண்ணாமலைக்கும் தெரியாமல் இல்லை. ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலை தமிழ்நாடு பாஜக தன்னுடைய தலைமையிலேயே சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எல்லா வழிகளிலும் டெல்லி மேலிடத்தை சமானதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் அவர். அதேநேரத்தில் தமிழக பாஜகவுக்குள் மாநில தலைமை பொறுப்புக்கு ஆசைப்படுபவர்களையும் சைலண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைகள் அண்ணாமலையை பைபாஸ் செய்து டெல்லியில் தங்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் மூலம் இங்கு நடப்பதை போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சட்டப்பேரவை நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் டெல்லி தலைமை அண்மைக்காலமாக அண்ணாமலை மீது வரும் புகார்களை காது கொடுத்து கேட்க தொடங்கியிருக்கிறது. அண்ணாமலை நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட அவர், டெல்லியை சமாதானப்படுத்தி தன்னுடைய மாநில தலைவர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

இந்த நேரத்தில் தான் நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேசியதற்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் ரியாக்ஷன் தமிழ்நாடு பாஜகவுக்குள் நடக்கும் உட்கட்சி பூசலை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா?, கூட்டணிக்கு அதிமுகவுக்கு வர வேண்டும் என்பதற்காக தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறதா? என நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமியுடன் உட்கார்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும், இதற்காக ரெய்டு விட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை என பதிலளித்தார்.

இந்த கேள்வி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அண்ணாமலை, "அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு எல்லாம் ரெய்டு விடும் அதிகாரம் இல்லை" என கொஞ்சம் காட்டமாக பதில் கொடுத்தார். இந்த பதில் தான் அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே பனிப்போர் நடைபெறுவதை உறுதியாக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானவர்கள் ரயிலில் பணம் எடுத்துச் சென்று மாட்டிக் கொண்ட விவகாரத்தில் அண்ணாமலை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் தான் இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்திருக்க முடியும் என நயினார் தரப்பு உறுதியாக நம்புகிறது.

அப்போது முதல் இருவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. அதேநேரத்தில் நயினார் நாகேந்திரன் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி மீது கண் வைத்திருக்கிறார். இதுவும் அண்ணாமலைக்கு பிடிக்காததால், அவரை எப்படியாவது ஓரம் கட்ட வேண்டும் என ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு மத்தியில் நடக்கும் கோஷ்டி பூசலை தெரிந்து கொண்ட மற்ற மூத்த தமிழ்நாட்டு பாஜக தலைகள் இருவரையும் தவிர்த்து நாம் எப்படியாவது மாநில தலைமை பதவியை பிடித்து விட வேண்டும் என தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு டெல்லி மேலிடத்தின் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும். அண்ணாமலை நீடிப்பாரா? நீக்கப்படுவாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

மேலும் படிக்க | வேங்கைவயல் விவகாரம்... நடந்தது இதுதான் - தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கம்!

மேலும் படிக்க | பெரியாரை அவமானப்படுத்தமாட்டேன் - அண்ணாமலை பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News