இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி

விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீரர். வாழ்த்துக்கள்! இதுபோன்று வெற்றிகளை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 19, 2019, 01:46 PM IST
இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி title=

புதுடெல்லி: விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி முன்னேறி வருவதை போல, அவரின் சாதனைகளும் அதிகரித்து வருகின்றன. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (International Cricket Council) விராட் கோலியை வாழ்த்தியுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் வீரர் விராட் கோலியை ஒரு சிறந்த வீரர் என்று கூறியுள்ளார். மூன்று விதமான ஆட்டங்களில் சராசரி 50க்கும் மேல் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார். தற்போது, ​​அவரின் ஒருநாள் போட்டி சராசரி 60.31, டெஸ்ட் போட்டிகளில் 53.14, டி-20 கிரிக்கெட்டில் 50.85 சராசரியாக உள்ளது.

நேற்று (புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அணிக்கு வெற்றியை கொடுத்த பிறகு தான் மைதானத்திலிருந்து வெளியே வந்தார். இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு, டி-20 போட்டிகளில் அவரது சராசரி 50க்கு மேல் எட்டியது. 

விராட் கோலியின் சாதனையை ஐ.சி.சி ட்வீட் செய்து வாழ்த்தியது. அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடியும் ட்வீட் செய்துள்ளார். அவர், தனது ட்வீட்டரில், 'விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீரர். வாழ்த்துக்கள்! இதுபோன்று வெற்றிகளை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும். அதன்மூலம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கவும் எனக் கூறியுள்ளார்.

 

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இந்த அணியில் அதிகப்பட்சமாக அணித்தலைவர் குவிண்டன் டி காக் 52(37) ரன்கள் குவித்தார், இவருக்கு துணையாக டெம்பா பாவுமா 49(43) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் தீபக் ஷஹர் 3(19 ரன்கள்) விக்கட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12(12) ரன்களுக்கு வெளியேற ஷிகர் தவானுடன் 40(31) ஜோடி சேர்ந்த விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72*(52) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்ட் 4(5) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி, வரும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் செப்டம்பர் 22-ஆம் நாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News