கவிஞர் நா. முத்துக்குமாரின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிமஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி ரெயின்போ காலனி', 'காக்காமுட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92-க்கும் மேற்பட்ட படங்களில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மிக எளிய நடையில் இவர் ஏராளமான கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
இவர் இந்த உலகில் இல்லாவிட்டாலும், அவரது கவிதை, பாடல்கள் நீக்கமற நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.