Delhi CM Candidates Race: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, 27 ஆண்டுகால அதிகார வனவாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, பாஜகவின் அடுத்த சவால் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது. பல போட்டியாளர்களின் பெயர்களும் விவாதத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. டெல்லியின் டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? டெல்லி முதவராகும் வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது? பாஜகவின் திட்டம் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
புது தில்லி சட்டமன்ற தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மாவுக்கு பாஜக உயர் தலைமை வெகுமதி அளிக்கக்கூடும் என்றும், அவர் டெல்லியின் அடுத்த முதலமைச்சராகும் போட்டியில் முன்னிலை வகிப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, பிரவேஷ் வர்மாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றார். அதன்பிறகு, பாஜக சார்பில் வெற்றிப் பெற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்எல்ஏக்களுடன் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவை சந்திக்கவும் அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒருபக்கம் நடந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக பாஜக மத்தியத் தலைமையின் மனதில் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பது கடினமாக உள்ளது. ஏனென்றால் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் சில பெயர்கள் விவாதிக்கப்படும் போது, அதிகம் அறியப்படாத, பேசப்படாத ஒரு முகத்தை கொண்டு வந்து முதலமைச்சராக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது தான் பாரதிய ஜனதா கட்சியின் செயலாகவே உள்ளது.
சமீபத்தில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றபோது, முதலமைச்சர் பதவிக்கு இவருக்கு தான் கிடைக்கும் என நான்கு அறியப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்கள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. ஆனால் மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தவர்களை குறித்து யாரும் கணித்திருக்க முடியாது. அதாவது சத்தீஸ்கரில், விஷ்ணு தேவ் சாயிடமும், மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவிடமும், ராஜஸ்தானில் பஜன்லால் சர்மாவிடமும் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது.
கடைசியாக 1993 முதல் 1998 வரை டெல்லியில் பாஜக ஆட்சியில் இருந்தது. இந்த 5 ஆண்டு காலத்தில், கட்சி 3 முதலமைச்சர்களை உருவாக்கியது. மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா மற்றும் சுஷ்மா ஸ்வராஜ்.
டெல்லி முதல்வர் பதவிக்கு தற்போது விவாதிக்கப்படும் பெயர்களில் பிரவேஷ் வர்மாவைத் தவிர, ஆர்எஸ்எஸ் முகமாக இருக்கும் அஜய் மஹாவர், பூர்வாஞ்சலி அபய் வர்மா, பங்கஜ் சிங், மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜேந்திர குப்தா மற்றும் முன்னாள் ஏபிவிபி தலைவரும் என்டிஎம்சி துணைத் தலைவருமான சதீஷ் உபாத்யாய் ஆகிய பெயர்களும் உள்ளன.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவாவின் பெயரும் முதல்வர் பதவி ரேஸில் உள்ளது. இது குறித்து சச்தேவாவிடம் கேட்டபோது, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ஒரு பாஜக தொண்டர் மட்டுமே இருப்பார். மத்திய தலைமை இதை முடிவு செய்யும் என்றார்.
மற்றொரு முக்கிய ஒரு மூத்த பாஜக தலைவர் கூறுகையில், "கோண்டா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஜய் மஹாவர் போன்ற ஒரு சாதாரண நபரையும் கட்சி தேர்வு செய்யலாம் என்றார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்ததால் பிரவேஷ் வர்மாவுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், வர்மாவின் வெற்றி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். டெல்லி அரசியலை பொறுத்த வரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார். இதன் காரணமாக டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் அவர் தனித்து நிற்கிறார்.
புது தில்லி தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிடுவது ஒரு துணிச்சலான முடிவு என்றும், அதற்காக கட்சி பர்வேஷ் வர்மாவுக்கு வெகுமதி அளிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அவரது தந்தை சாஹிப் சிங் வர்மாவும் முதல்வராக இருந்தவர். அவரும் டெல்லியில் நல்ல செல்வாக்கைக் கொண்டிருந்தார். பாஜகவின் பிரபலமான ஜாட் சமூகத்தின் முகமாக இருந்தார் என்பத்ம் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விக்கு மற்றொரு காரணியாக பூர்வாஞ்சலி வாக்காளர்களிடையே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. (கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குடியேறியவர்கள் டெல்லியில் பூர்வாஞ்சலி வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்).
பூர்வாஞ்சலி வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தும் 14 தொகுதிகளில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன.
அதேநேரம் டெல்லி பாஜக தலைமையகத்தில் தனது வெற்றி உரையில், "கிழக்குப் பிராந்திய வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்" என்பது கவனிக்கத்தக்கது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பூர்வாஞ்சலைச் சேர்ந்த ஒருவரிடம் பாஜக ஒப்படைக்கக்கூடும் எனவும் பேசப்படுகிறது. பாஜகவின் பூர்வாஞ்சல் முகங்களாக லட்சுமி நகர் எம்எல்ஏ அபய் வர்மா, கரவால் நகர் எம்எல்ஏ கபில் மிஸ்ரா, விகாஸ்புரி எம்எல்ஏ பங்கஜ் சிங் மற்றும் சங்கம் விஹார் எம்எல்ஏ சந்தன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் பஞ்சாபி-சீக்கிய சமூகத்தை சேர்ந்த ஒருவரும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது. ராஜோரி கார்டனைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் சிர்சாவும், ஜனக்புரியைச் சேர்ந்த ஆஷிஷ் சூட்டும் போட்டியில் உள்ளனர்.
ஆஷிஷ் சூட் ஜம்மு-காஷ்மீரின் இணைப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் எம்சிடி நிர்வாகத்தில் பணியாற்றியதன் காரணமாக நகர நிர்வாகத்தை நன்கு அறிந்தவர். பஞ்சாபி-சீக்கிய முகத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பஞ்சாபில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பாஜக தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி செய்யலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் (EC) தரவுகளின்படி, 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் ஆம் ஆத்மி கட்சி (AAP) 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க - யார் இந்த பர்வேஷ் வர்மா? கெஜ்ரிவாலை வீழ்த்தியவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ