மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருடர்களை பிடிப்பதற்காக அப்பகுதி போலீஸ் ஒரு அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளது. இந்த திட்டம் ஆனது தற்போது மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாய் அமைந்துள்ளது.
பண்டாரா மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார்கள் அடிக்கடி எழுந்த நிலையில், மணல் திருடர்களை பிடிக்க அப்பகுதி போலீஸ் அதிகாரிகள் ஒரு அதிரடி திட்டத்தை தீட்டினர். அந்த திட்டத்தின் படி தங்களது வாகனத்தை திருமண வாகனம் போல் (திருமணத்திற்கு பின் மணமகன் மற்றும் மணமகள் செல்லும் வாகனம்) வடிவமைத்து திருட்டு சம்பவம் நிகழும் இடத்தின் வழியாக சென்றுள்ளனர்.
பண்டாராவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவோனி தெஹ்ஸில் உள்ள கட்கேடா காட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு, மேலும் 12 டிப்பர் லாரிகள், எட்டு எக்சேவட்டர்ஸ் மற்றும் திருடப்பட்ட மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன, இவை அனைத்தும் ரூ.3.6 கோடி மதிப்பிலானவை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரா SP அரவிந்த் சேலின் கீழ் ஒரு குழு சந்திரபூர் மாவட்டம் வழியாக 150 கிலோமீட்டர் தூரத்தில் மூன்று தனியார் வாகனங்களில் பயணித்து, இந்த திருட்டு சம்பவத்தை கண்டறிந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவத்தை கண்டறிய ஒரு போலி திருமண ஊர்வலத்தையே அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த வழக்கில் பிடிப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) பயன்படுத்தப்படலாம் என்று நாக்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் KMM பிரசன்னா தெரிவித்துள்ளார்.