முன்னாள் IAS அதிகாரி ஷா பைசல் இன்று ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்னும் புதிய கட்சியை தொடங்கினார்!
முஸ்லிம் மக்களிடத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடப்பதாக குற்றம்சாட்டி தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் (முன்னாள்) IAS அதிகாரி ஷா பைசல் இன்று புதிய கட்சி தொடங்கினார். இன்று துவங்கப்பட்ட இவரது கட்சியின் JNU முன்னாள் மாணவியும், சமூக ஆர்வலுருமான ஸ்செல்லா ரெஷித் இணைந்துள்ளார்.
கட்சியின் துவக்க விழாவிற்கு முன்னதாக வெளியிடப்பட்ட கட்சியின் குறிக்கோள் ஆவணத்தில்., ஜம்மு காஷ்மீர் மக்களின் நிம்மதியை நோக்கி கட்சி செயல்படும், அதற்கான உரிய அழுத்தத்தை அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலையான அமைதியினை காஷ்மீரில் கொண்டு வருவதே கட்சியின் கொள்கை எனவும் கட்சி தலைமை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்திய அரசியலமைப்பின் கீழ் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாக்க தங்கள் கட்சி செயலாற்றும் எனவும், "பெளத்தர்கள், சீக்கியர்கள், கிரிஸ்துவர் மற்றும் காஷ்மீரி பண்டிதர்கள் போன்ற கீழ் பிரதிநிதித்துவம் வாய்ந்த சமூகங்களுக்கு போதுமான அரசியல் பிரதிநிதித்துவம்" பெற்றுத்தர வேண்டியவற்றை செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் டோக்ரா சமூக கலை, புத்த பாரம்பரியம் மற்றும் பிற நாட்டுப்புற மரபுகள் போன்ற புறக்கணிக்கப்பட்ட பாரம்பரியங்களை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்துள்ளது.
---ஷா பைசல் பின்னணி---
2009-ஆம் ஆண்டு IAS தேர்வில் முதலிடம் பிடித்த ஷா பைசல், பின்னர் மத்திய அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தார். இவர் தனது IAS பதவியை இரு மாதங்களுக்கு முன்பாக ராஜினாமா செய்தார்.
காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் அசாதாரணமான அரசியல் கொலைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசாங்கத்தில் முஸ்லிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி ஷா பைசல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை ஆகிய பொது நிறுவனங்கள் ஆகியவை சீர்கெட்டுப்போனதால் நாட்டின் அரசியலமைப்பு முறைக்கே குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.
தனது ராஜினாமாவை தொடர்ந்து முழுமூச்சாக மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து இளைஞர்களை அவர் சந்தித்தார். காஷ்மீரில் "ஊழல் இல்லாத, தூய்மையான மற்றும் வெளிப்படையான" அரசியலை உருவாக்க முயன்றுவருவதாகக் கூறி இளைஞர்களை ஆதரவு கோரி வந்தார். இந்நிலையில் இன்று அவர் புதிய கட்சியை துவங்கியுள்ளார்.