INX மீடியா பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை அமலாக்க துறை கைது செய்தது!
திகார் சிறையில் நடைப்பெற்ற இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர், அடுத்தக்கட்ட விசாரணைக்காக ப.சிதம்பரத்தை அமலாக்க துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்தின் கைது உத்தரவுகளை அமலாக்க துறை காகிதத்தில் வைத்துள்ளது, நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு அவர் திகாரில் இருந்து அப்புறப்படுத்த படுவார் என தெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரத்தை விசாரிக்கவும், தேவைப்பட்டால் கைது செய்யவும் மூன்று சிறப்பு அதிகாரிகள் கொண்ட அமலாக்க துறை குழுவிற்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்ற அனுமதி அளித்தது.
மேலும் சிதம்பரத்தை விசாரிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து பாதுகாப்பான இடத்தை வழங்குமாறும், சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் உடன் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்க துறை குழு, பின்னர் அவரை கைது செய்வதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்க துறை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிறப்பு CBI நீதிபதி அஜய் குமார் குஹார் இந்த உத்தரவை பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரின் மனைவி நளினி மற்றும் அவர்களது மகன் கார்த்தியும் விசாரணைக்கு முன்னதாக திகார் வளாகத்தை அடைந்திருந்தனர்.
நிதியமைச்சராக இருந்த காலத்தில் INX மீடியாவிற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (FIPB) ஒப்புதல் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 21 முதல் சிதம்பரம் நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.