நடுத்தர குடும்பங்களின் நிலை எப்போதும் கஷ்டமானதுதான். பட்ஜெட் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... ஒவ்வொரு மாதமும் சவாலாகவே கடந்து செல்லும்.
EMI, திடீர் செலவுகள் இதையெல்லாம் தாண்டி குழந்தைகளின் படிப்பு, பெண் திருமண செலவு, இன்சூரன்ஸ் என பார்த்துப்பார்த்து சேமிக்க வேண்டும். இதுபோக மிச்சம் இருக்கும் பணத்தில் தான் மாதாந்திர குடும்ப செலவு ஓடும்.
இப்படி பட்ஜெட்டில் ஓட்டிக்கொண்டிருந்தவர்களை ஒரேயடியாக உட்கார வைத்து விட்டது கொரோனா. ஊரடங்கு அமல்படுத்திய பிறகு பாதிப்பேருக்கு வருமானம் குறைந்து விட்டது. வேலை இல்லை. வராத வருமானத்துக்கு பட்ஜெட் எங்கே போடுவது? உண்டியல் பணம் முதற்கொண்டு, சேமிப்பு அத்தனையிலும் கைவைத்தாகிவிட்டது.
இந்த சூழ்நிலையில் மக்களின் வருவாய் மற்றும் சேமிப்பு தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு குடும்பத்தினரிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வே முடிவுகளை தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், படிப்பு செலவு, கல்யாண செலவுக்கு காசு சேர்த்த காலம் போய், கொரோனா வைத்திய செலவுக்கு காசு சேர்க்க வேண்டிய மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டது தெரிய வந்துள்ளது.
தனியார் காப்பீடு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட அந்த சர்வேயில், நிதி பாதுகாப்பு என்பது மெட்ரோ நகரங்களில் குறைவாக, அதாவது 46 சதவீதமாக உள்ளது. டயர் 2 நகரங்களில் 55 சதவீதமாகவும், டயர் 1 நகரங்களில் 52 சதவீதமாகவும் உள்ளது.
மெட்ரோ நகரங்களில் இருப்பவர்களில் 64 சதவீதம் பேர், வேலை மற்றும் தொழில், நிலையான வருவாய் கொரோனாவுக்கு முன்புள்ள நிலையுடன் ஒப்பிடுகையில் கவலை அளிப்பதாக கூறியள்ளனர்.
ALSO READ | AIIMS தில்லியில் COVID-19 தடுப்பு மருந்து COVAXIN மனித பரிசோதனை தொடங்குகிறது..!!!
சேமிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வேயில் பங்கேற்றவர்களில் 57 சதவீதம் பேர் கொரோனா(Corona) சிகிச்சை செலவுகளை கருத்தில் கொண்டு சேமிப்பதாக கூறியுள்ளனர். அவசர மருத்துவ செலவுகளுக்கு சேமிப்பதாக 54 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வருவாய் திடீரென குறைந்து விட்டால் சமாளிக்க சேமிப்பதாக 43 சதவீதம் பேரும், குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவர் இறந்து விட்டால் சமாளிக்க சேமிப்பதாக, 41 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த குழந்தைகள் படிப்பு செலவுக்கான சேமிப்பு கடைசி இடத்துக்கு வந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில், குழந்தைகள் படிப்பு செலவுக்கு சேமிப்பதாக 32 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.
இதுபோல், குழந்தைகளின் திருமண செலவு, வீடு வாங்குவது, வயதான காலத்தில் பாதுகாப்பு போன்றவையும் சேமிப்பு முன்னுரிமையில் கடைசி இடத்துக்கு வந்து விட்டதாக ஆய்வு நடத்திய நிறுவனம் கூறியுள்ளது.
ALSO READ | Facebook: கொரோனா வதந்தியின் உண்மை முகம்... தோலுரித்து காட்ட தனிப்பக்கம்..!!!
பிற முதலீடுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை எனினும், ஒட்டு மொத்த அளவில் சேமிப்பு பழக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுபோல், காப்பீடு செய்ய வேண்டிய அவசியத்தை பலர் உணர்ந்துள்ளனர் என ஆய்வு நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.