54 அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி இல்லை: தாய்மொழியைப் புறக்கணிப்பதா?- கல்வியாளர் வேதனை

தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே  பயிற்று மொழியாக உள்ளதாகவும், தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்  தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Edited by - K.Nagappan | Last Updated : Mar 15, 2022, 04:54 PM IST
  • 54 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை
  • ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது
  • அரசுப் பள்ளிகளில் ஏன் இந்த பாரபட்சம், அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை?
54 அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி இல்லை: தாய்மொழியைப் புறக்கணிப்பதா?- கல்வியாளர் வேதனை title=

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, கடலூர், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள  54 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும், ஆங்கிலம் மட்டுமே  பயிற்று மொழியாக உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழும் பயிற்று மொழியாக இருந்து வந்ததாகவும் தற்போது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளியாக மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

அரசுப் பள்ளிகளில் ஏன் இந்த பாரபட்சம், அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற குரல்களும் வலுவாக எழுந்துள்ளன. தமிழக அரசு வரும் கல்வி ஆண்டிலிருந்து இந்நிலையை மாற்ற வேண்டும், தமிழ் பயிற்று மொழியாகக் கொண்டிராத ஒரு பள்ளியும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும் என்று கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம் பேசினோம். 

''இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து  தமிழை  வளர்த்தவர்கள் நாம். மொழிக்காக உயிரைக் கொடுத்தவர்கள் நாம். மொழியைப் பயன்படுத்தி அரசியல் நடத்தியவர்களும் பதவிகளைப் பெற்றவர்களும் நாம். தாய்மொழிக் கல்வியே வேண்டாமென்று அழித்தொழிப்பவர்களும் நாமாகவே இருக்கிறோம் என்ற நிலை தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டிருப்பதுதான் வேதனையானது. ஒன்றிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள அனைத்துலகத் தாய் மொழி நாள் அறிக்கை (2018), மொழிகள் அழிந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது. ஒரு மொழி அழியும்போது அதனோடு சேர்ந்து அம்மொழியைப் பேசும் மக்களின் முழுப் பண்பாடும் அறிவார்ந்த பாரம்பரியமும் சேர்ந்தே அழிவதாக இவ்வறிக்கை கூறுகிறது. தாய்மொழி வழியிலான தொடக்கக் கல்வியின் முக்கியத்துவத்தை இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.     

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்பது வரலாற்று உண்மை. தனது தாய்மொழியில் கல்வி கற்றால் பிழைக்கவே வழி இல்லாமல் போய்விடும் என்ற அவநம்பிக்கையை மக்களிடம் எற்படுத்தி விட்டாலே போதும். ஒரு மொழி இயற்கை மரணம் அடைவதை எவராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் நடப்பது இதுதான். இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் வரை ஆங்கில வழிக் கல்வியை அரியணை ஏற்றி வைத்திருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள். அங்கன்வாடியிலும் ஆங்கிலக் கல்வி என்ற நிலை!!  கல்விக் கூடங்களில் தமிழ் இல்லாமல் செய்த பிறகு தமிழ் எப்படி வாழும்? வளரும்? 

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான நம் தமிழுக்கு ஏன் இந்த அவலநிலை ஏற்பட்டது? மக்கள் நலன்களுக்கு எதிரான முதலாளிகளின் நலன்களுக்கான உலகமய, தனியார் மயக் கொள்கைகள் நமது நாட்டிலும் கடந்த முப்பதாண்டுகளாக நடைமுறைக்கு வந்துள்ளன.  இக்கொள்கைகள் கல்வித் துறையிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டன. காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருந்த காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிலும் தனியார்மயக் கல்விக் கொள்கைகள் வேகமாக நடைமுறையாயின. எல்லோருடைய ஆட்சியிலும் கல்வியில் தனியார்மயம் பெருக்கெடுத்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகின. ஆங்கிலப் படிப்பே அறிவுப் படிப்பு, தனியார் பள்ளிப் படிப்பே தரமான படிப்பு என்ற மூட நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டது. 

தனியார் சுயநிதி ஆங்கில வழிப் பள்ளிகள் பெரும் அளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வசதி படைத்த, நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில மொழி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தாய்மொழி வழிக் கல்வி வழங்கிய அரசுப் பள்ளிகளைக் கைகழுவ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசுப் பள்ளிகள் ஏழைகளின் பள்ளிகளாக மாறின. ஏழைகளின் பள்ளிகளாக மாறிப்போன அரசுப் பள்ளிகளை இப்பள்ளிகளில் பணிசெய்யும் ஆசிரியர்களே நம்ப முடியாத நிலை உருவானது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளே தனியார் பள்ளியில் படிக்கும் அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டது. உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு அவலம் இருக்காது. 

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் சில  திட்டங்களை தமிழக அரசே கொண்டுவந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகள் தரமற்றவை, தாய்மொழி வழிக் கல்வி பயனற்றது என்ற கருத்துகள் மக்களிடம் மேலும் வலுவாக்கம் செய்யப்பட்டன. குழந்தைகளின் எதிர்கால நலன்களுக்குத் தாய்மொழி வழிக் கல்வி வாய்ப்பளிக்காது, ஆங்கில வழிக் கல்வியே வாழ்வளிக்கும் என்ற மாய வலையில் எல்லா மக்களும் இன்று சிக்கித் தவிக்கின்றனர். இதனால் கல்விச் செலவு என்னும் பெரும் சுமைக்கு பெரும்பாலான மக்கள் ஆளாகியுள்ளனர். 

மேலும் படிக்க | மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், உருக வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்

அரசு, தனியார் என்று எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறை ஆக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கில வழிக் கல்வி மூலம் தமிங்கிலர்களாக்கப்படும் வருங்காலத் தலைமுறையினர் தமிழ்ச் சொல்லறிவு அற்றவர்களாகவும் தமிழில் ஒரு வாக்கியத்தைக் கூட பிழையின்றிப் பேசவும் எழுதவும் தகுதியற்றவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள். தமிழ் மொழி முறையாகக் கற்பிக்கப்படாத நிலையில் தமிழ் இலக்கணமும் தெரியாது, தமிழ் இலக்கியமும் புரியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் தமிழில் புதிய, தரமான இலக்கியப் படைப்புகளை எழுதக் கூட எவரும் இருக்கப்போவதில்லை. ஏற்கனவே உள்ள தமிழ் இலக்கியங்களும் வாசிப்பாரின்றி அழிந்துவிடும்.  இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாடம் போதிக்கும் ஆசிரியர்களும் தமிழ் வழியில் படித்தவர்களே. ஆங்கில வழியில் கற்பிக்கும் தகுதி இல்லாத ஆசிரியர்களால் குழந்தைகள் எவ்வாறு ஆங்கில மொழியில்  கல்வி அறிவு பெற முடியும்? புரியாமல் குருட்டு மனப்பாடம் செய்வதை எப்படிக் கல்வி என்று கூறுவது? வருங்காலத் தலைமுறையை அறிவுக் குருடாக்கும் பாவச்செயல் தமிழ்நாட்டில் நடந்துவருகிறது. 

ஆங்கிலக் கல்வி மூலம் இந்தியாவில் ஒரு அடிமைச் சமூகத்தை உருவாக்குவதே அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களின் திட்டம். எனவே விடுதலை என்பது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து  மட்டுமல்லாமல், ஆங்கில வழிக் கல்வியிலிருந்தும் விடுபட்டு இந்திய நாட்டு மக்கள் அவரவர் தாய்மொழிகள் வாயிலாகக் கல்வி கற்க வழிசெய்யவேண்டும் என்று நமது தலைவர்கள் அப்போதே கருதினர். 
'அயல் நாட்டுப் பயிற்றுமொழி நமது நாட்டு ஆற்றலைப் பலவீனப்படுத்திவிடும். நம் மாணவர்களின் ஆயுளைக் குறைத்துவிடும். நம் மாணவர்களைப் பொதுமக்களிடம் இருந்து பிரித்துவிடும். கல்விக்கான செலவை அவசியமின்றி அதிகமாக்கிவிடும், இந்த முறையைத் தொடர்ந்து நாம் பிடிவாதமாக கடைப்பிடித்துவந்தால் நமது நாட்டின் உயிர் நாடியையே அது அழித்துவிடும்' என்று மகாத்மா காந்தி அன்றைக்கே எச்சரித்தார். நமது நாட்டின் உயிர்நாடி இப்போது அழிக்கப்பட்டு வருகிறது'' என்று மூர்த்தி தெரிவித்தார். 

மேலும் படிக்க | பிளஸ் 2 தேர்வுக்கு முன்பே அட்மிஷன்: கொக்கி போடும் பொறியியல் கல்லூரிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News