NPS -இல் பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க முடியுமா? இதற்கான விதிமுறை என்ன?

National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2024, 09:10 AM IST
  • NPS Partial Withdrawal: இதற்கு தேவையான தகுதி என்ன?
  • இதில் கிடைக்கும் வரிச் சலுகைகள் என்ன?
  • இதற்கான செயல்முறை என்ன?
NPS -இல் பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க முடியுமா? இதற்கான விதிமுறை என்ன? title=

National Pension System: இந்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய ஓய்வூதிய அமைப்பை (NPS) அறிமுகப்படுத்தியது. இது பணி ஓய்வு மற்றும் முதுமையில் பாதுகாப்பை வழங்கும் ஒரு ஓய்வூதியம் மற்றும் முதலீட்டுத் திட்டமாக செயல்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த திட்டத்தை நிர்வகிக்கின்றது. அறுபது வயதை அடைந்த பிறகு, என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) தங்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குகிறார்கள். 

எனினும், சில தேவைகள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில், 60 வயதை அடைவதற்கு முன்னரோ அல்லது ஓய்வுபெறும் போதோ, ​​சில உறுப்பினர்கள் NPS இல் சேர்த்துள்ள பணத்தை திரும்பப் பெற விரும்புகிறார்கள். அப்படி முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா? எந்தெந்த சந்தர்ப்பங்களில் இப்படி செய்ய முடியும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

ஓய்வு பெறுவதற்கு முன், NPS -இல் பகுதியளவு தொகையை எடுக்க முடியுமா?

ஓய்வு பெறுகையில் NPS உறுப்பினர்கள் பெறும் மாதாந்திர தொகையை சமரசம் செய்யாமல் அல்லது அவர்களின் ஓய்வூதியக் கணக்கை நிறுத்தாமல், NPS உறுப்பினர்களால் குறிப்பிட்ட தேவைகளுக்காக தங்கள் என்பிஎஸ் கணக்கு (NPS Account) சேமிப்பிலிருந்து பகுதியளவு தொகையை திரும்பப் பெற முடியும்.

NPS Partial Withdrawal: இதற்கான நிபந்தனைகள் என்ன?

ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது. பிப்ரவரி 1, 2024 அன்று இது செயல்பாட்டுக்கு வந்தது. சில நிபந்தனைகளின் கீழ் என்பிஎஸ் கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்க அனுமதிக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகளின் விவரங்களை இங்கே காணலாம். 

- குழந்தைகளின் உயர் கல்விக்காக பகுதியளவு தொகையை எடுக்கலாம். 
- குழந்தைகளின் திருமணத்திற்கான பணத்தை எடுக்கலாம். 
- வீடு வாங்கும் போது அல்லது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது என்பிஎஸ் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், அப்படி எடுக்க வேண்டுமானால், உறுப்பினருக்கோ அல்லது அவரது வாழ்க்கைத் துணைக்கோ ஏற்கனவே சொந்த வீடு இருக்கக்கூடாது என்பது முக்கியம்.
- மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற பணம் எடுக்கலாம். 
- புதிய வணிகம், ஸ்டார்ட் அப் ஆகியவற்றைத் தொடங்க பணம் எடுக்கலாம். 
- திறன் மேம்பாடு அல்லது சுய-வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் இந்த தொகையை எடுக்கலாம். 

மேலும் படிக்க | EPFO Update: PF கணக்கு இருந்தா இதை முதலில் படிங்க.. செயல்முறைகளில் பல முக்கிய மாற்றங்கள்

NPS Partial Withdrawal: இதற்கு தேவையான தகுதி என்ன?

ஒருவர் தன்னுடைய NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கு, பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

- திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் என்பிஎஸ் சந்தாதாரராக (NPS Subscriber) இருந்திருக்க வெண்டும்.
- முழு சந்தா காலத்தில் 3 முறை பகுதியளவு தொகையை எடுக்க அனுமதிக்கப்படுகின்றது. எனினும் ஒவ்வொரு முறை இந்த தொகையை எடுப்பதற்கும் இடையில் குறைந்தபட்சம் ஐந்து வருட இடைவெளி இருக்க வேண்டும். 
- NPS பங்களிப்பில் 25% மட்டுமே திரும்பப் பெற முடியும். எனினும், நிறுவனத்தின் பங்களிப்பின் பகுதியிலோ அல்லது பங்களிப்புகளின் மீதான வருமானத்திலிருந்தோ பணம் எடுக்க அனுமதிக்கப்படாது.

NPS Partial Withdrawal: இதில் கிடைக்கும் வரிச் சலுகைகள் என்ன?

பகுதியளவு ஓய்வூதியத்தை திரும்பப் பெற்றால், பிரிவு 10(12B) இன் கீழ் PFRDA ஆல் குறிப்பிடப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், சுய பங்களிப்பில் 25% வரை திரும்பப் பெறப்பட்ட தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.

NPS Partial Withdrawal: இதற்கான செயல்முறை என்ன?

- NPS உடன் இணைக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு அரசாங்க நோடல் ஏஜென்சியில் இதற்காக விண்ணப்பிக்கலாம். 
- பணம் எடுப்பதற்கான காரணத்தை விளக்கும் சுய அறிவிப்பை வழங்க வேண்டும். 
- அதன் பிறகு, விண்ணப்பம் சரிபார்ப்பு மற்றும் செயலாக்கத்திற்காக மத்திய பதிவு-காப்பு முகமைக்கு (CRA) அனுப்பப்படும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

 

Trending News