Tamil Nadu Congress Protest Today: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில்,"பாஜகவின் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக கடந்த ஜனவரி 14ஆம் தேதி மதகலவரத்தால் எண்ணற்ற உயிர், உடமை இழப்புகளுக்கு ஆளான மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 6 ஆயிரம் கி.மீ. தூர 'இந்திய ஒற்றுமை நீதி பயணம்' என்ற சுற்றுப்பயணத்தை தலைவர் ராகுல்காந்தி தொடங்கி நடத்தி வருகிறார்.
பாஜகவினரின் வன்முறை வெறியாட்டம்
இதற்கு மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேச மாநில மக்களின் பேராதரவோடு அசாம் மாநிலத்தில் தற்போது பயணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத, ஊழலில் ஊறித் திளைத்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தூண்டுதலின் பேரில் தலைவர் ராகுல்காந்தியை வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கார் தாக்கப்பட்டிருக்கிறது. இது பாஜகவினரின் சகிப்புத்தன்மையற்ற, வன்முறை வெறியாட்டமாகவே இருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறோம். புகழ் பெற்ற சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோயிலில் தலைவர் ராகுல்காந்தி இன்று வழிபடுவதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | அயோத்தி இராமர் விழா ஒரு தேர்தல் பிரச்சார அரசியல் - தொல். திருமாவளவன்!
சர்வாதிகாரப் போக்கு
திடீரென்று நேற்று இரவு பாஜக அரசு அனுமதியை ரத்து செய்துவிட்டது. இன்று காலை கோயிலில் வழிபடுவதற்காக புறப்பட்ட தலைவர் ராகுல்காந்தியை காவல்துறையினர் தடுத்ததால் காலை 8.15 மணியில் இருந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகிறார். பாஜக ஆட்சியில் எப்போது கோயிலுக்கு செல்லலாம், எப்போது வழிபடலாம் என்பதை அவர்களே முடிவு செய்கிற சர்வாதிகாரப் போக்கு அரங்கேறி வருகிறது.
மதச்சார்பற்ற நாட்டில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடவுளை வழிபடுவதற்கு பாஜக ஆட்சியில் உரிமை மறுக்கப்படுகிறது என்பது தான் இந்த நிகழ்வின் வெளிப்பாடாகும். இத்தகைய போக்கு நீடிப்பது இந்தியாவின் பன்முக கலாச்சாரத்திற்கு எதிரானதாகும். இதை ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
இன்று போராட்டம்
அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி தலைவர் ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் வன்முறை செயலை கண்டித்தும், தலைவர் ராகுல்காந்தி வழிபடுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்ததற்கு எதிராகவும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் இன்று (22.1.2024) மாலை 4.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவராஜசேகரன், எம்.பி. ரஞ்சன்குமார், ஜெ. டில்லிபாபு, எம்.ஏ. முத்தழகன், அடையாறு த. துரை ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்" என குறிப்பிட்டு இதில் கலந்துகொள்ளும்படி தொண்டர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | காஞ்சிபுரம்: எல்இடி திரை வைக்க அனுமதியே கேட்கவில்லை - காவல்துறை விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ