அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : Apr 7, 2022, 11:51 AM IST
  • 7.5% இடஒதுக்கீடு செல்லும்
  • சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
  • 5 ஆண்டுகளுக்கு பின் மறு ஆய்வு செய்ய உத்தரவு
 அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு title=

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும் போது,  31% பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும் என இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் வாதிடப்பட்டது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. தமிழகத்தில் அமலில் உள்ள 69% இட ஒதுக்கீடு தவிர,  பொதுப்பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டால் தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வுத்தகுதி அடிப்படையில் தான்  இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும் படிக்க | டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில்,  அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ளத் தவறி விட்டது எனவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும் நிலையில், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. மார்ச் 17-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். மேலும், நீதிபதி கலையரசன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு பின் இந்த இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு பின், இந்த இட ஒதுக்கீட்டு முறையை தொடராத  வகையில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, சட்டத்தை எதிர்த்த வழக்குகளை முடித்து வைத்தனர். அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும்...உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News