சென்னை: தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக-வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
6-ம் தேதி காலை டெல்லியில் மத்திய அமைச்சர் ஒருவரது குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றிரவு அவர் சென்னை திரும்பி ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சில எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை கவர்னரை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், திடீர் திருப்பமாக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று மதியம், முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்ததாக தெரிவித்தார். என்று கூறினார்.