தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
கொரோனா பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக போலீசாரின் முழு முகத்தையும் மறைக்கும் ஷீல்டுகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் முகத்தை மறைக்கும் ஷீல்டுகளை பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கொரோனா தொற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உடைகள் முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி நீதிமன்ற கிளை வரைவுக்குட்பட்ட 8 மாநகராட்சிகளில் அமல் படுத்த வேண்டும் என கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
READ | DTH, கேபிள் சந்தாதாரர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்!
அப்போது நீதிபதிகள் கூறுகையில்... "தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முழு முகக்கவசம் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் முகத்தை முழுவதும் மறைக்கும் ஷீல்டு வழங்க வேண்டும். காவலர்கள் இதனைப் பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோன்று தமிழகத்தின் அணைத்து மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். உள்ளாட்சித்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் இதனை கண்காணிக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.