"தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே!" - தெறிக்கவிடும் ஓ.பி.எஸ். ஆதரவு போஸ்டர்கள்

அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும் என சென்னைமற்றும் தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 15, 2022, 11:56 AM IST
  • அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத்தலைமை சர்ச்சை
  • ஓ.பி.எஸ்-க்கு ஆதரவான போஸ்டர்களால் பரபரப்பு
  • இ.பி.எஸ் தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம்
"தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே!" - தெறிக்கவிடும் ஓ.பி.எஸ். ஆதரவு போஸ்டர்கள் title=

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் யார் தலைமை வகிப்பது என்பது தொடர்பான பிரச்சனை இன்று வரை நீடித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு மாற்றாக அப்போது சசிகலா கருதப்பட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அவர் சிறைக்கு சென்றார். இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக இரட்டை தலைமை உருவானது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். 

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததால் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் எனும் கோரிக்கை அவ்வப்போது எழுந்து வருகிறது. இதில், அதிமுகவை மீண்டும் கைப்பற்றியே தீருவேன் என சசிகலா ஒருபக்கம் சூளுரைத்து வருவது அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி கூட உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என இருவரது ஆதரவாளர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து அங்குவந்த இருதரப்பு நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆரோக்கியமான முறையில் பல்வேறு கருத்துகளை விவாதித்ததாக கூறினார். மேலும், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பெரும்பாலான தலைமைக் கழக நிர்வாகிகள் , மாவட்டச் செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். கட்சிக்கு யார் தலைமை என்பது குறித்து வரும் நாட்களில் கட்சிதான் முடிவு செய்யும் என்றும், கட்சியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வர முடியும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். 

மேலும் படிக்க | ஒபிஎஸ்ஸூக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் - பரபரக்கும் ஆலோசனைகள்

இந்த நிலையில் "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே!" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "நிகழ்கால பரதனே! வழிநடத்த வாருங்கள் ஒளிமயமான கழகத்தின் ஒற்றைத் தலைமையே!". "அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே!" போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அதிமுக தலைமைக்கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. 

ops

இதேபோன்று "அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வணங்குகிறோம், அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் ஒற்றைத் தலைமையே, எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின் மூன்றாவது தலைமையே" என பல வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தேனி முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரவோடு இரவாக ஒட்டியுள்ளனர்.  தேனி நகரம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் ஒன்றியக் கழகம் சார்பாகவும், தனிப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாகவும் போஸ்டர்கள் தயார் செய்யப்பட்டு தேனி, போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

o panneerselvam

இந்த வரிசையில் ராமநாதபுரம் பகுதியில், "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே. அம்மா அவர்களின் அரசியல் வாரிசு. ஐயா ஓபிஎஸ் அவர்களே கழகத்தை தலைமை ஏற்று வழிநடத்த வாருங்கள்" எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களில் "அஇஅதிமுக ராமநாதபுரம் மாவட்ட உண்மை தொண்டர்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பரபரப்புகளுக்கு நடுவே எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஒற்றைத்தலைமை குறித்து தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையிலான இந்த மோதலால் அதிமுக மூன்றாம் முறையாக பிளவுபடுமோ எனும் அச்சம் அக்கட்சியின் தொண்டர்களிடையே மேலோங்கியுள்ளது. 

மேலும் படிக்க | கும்பகோணத்தில் வெறிச்செயல்; புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News