ராகுல், கில் வேண்டவே வேண்டாம் - நம்பர் 3இல் இவரை இறக்கணும்... இந்திய பேட்டிங் பலமாகும்

Team India: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு நம்பர் 3 இடத்தில் சுப்மான் கில், கே.எல். ராகுல் ஆகியோருக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பளித்தால் பேட்டிங் ஆர்டர் பலம் பெரும். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 21, 2024, 11:26 PM IST
  • சுப்மான் கில் ஆஸ்திரேலியாவில் சோபிப்பாரா என்பது கேள்விக்குறி
  • கேஎல் ராகுலின் சமீபத்திய பார்ம் கவலையளிக்கிறது.
  • இரண்டு ரிஸ்க்கான வீரர்களை அங்கு அழைத்துச் செல்வது நல்லதல்ல.
ராகுல், கில் வேண்டவே வேண்டாம் - நம்பர் 3இல் இவரை இறக்கணும்... இந்திய பேட்டிங் பலமாகும் title=

India National Cricket Team: இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. வரும் 24ஆம் தேதி புனேவில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (India vs New Zealand 2nd Test) இந்திய அணி என்னென்ன மாற்றங்களை செய்ய உள்ளது, ரோஹித் - கம்பீர் கேஎல் ராகுல், சிராஜை தூக்கிவீசுவார்களா, அரவணைத்து மேலும் ஒரு வாய்ப்பை கொடுக்கப்போகிறார்களா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

காரணம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (ICC World Test Championship Final 2025) செல்ல இந்திய அணிக்கு 7 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளை வெல்ல வேண்டும். நியூசிலாந்து தொடரில் இன்னும் 2 போட்டிகள்தான் இருக்கின்றன. இதில் ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடைந்தாலோ, டிரா ஆனாலோ நிலைமை சிக்கல் அடைந்துவிடும். அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் மட்டுமே இருக்கிறது. ஏற்கெனவே அழுத்தம் நிறைந்த அந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்ற மேலும் ஒரு அழுத்தத்தோடு சென்றால் இந்தியாவுக்குதான் பிரச்னை. 

பேட்டிங்கில் பெரிய பிரச்னை

அந்த வகையில், இந்த தொடரிலேயே இந்திய அணி (Team India) ஆஸ்திரேலியா தொடருக்கு இப்போதே தயாராக வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணி அதன் பேட்டிங்கில் பெரும் கவனத்தை செலுத்த வேண்டும். ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் எனலாம். துருவ் ஜூரேலையும் பேக் அப் கீப்பராக நிச்சயம் எடுத்துச்செல்லலாம். ஓப்பனிங்கிலும் பேக்அப் வேண்டும். 

மேலும் படிக்க | Gautam Gambhir | கேஎல் ராகுல் மீது கம்பீர் அதிருப்தி, ரோகித் செம ஹேப்பி

இங்குதான் பெரிய பிரச்னை இருக்கிறது. சுப்மான் கில், சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல் இந்த மூன்று பேரில் யார் யாரை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா தூக்கிச்செல்லப்போகிறது என்பதுதான் அது... சர்ஃபராஸ் கான் ஆஸ்திரேலியாவில் எப்படி செயலாற்றுவார் என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் அவரின் ஆட்ட நுணுக்கங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அவர் சரிப்பட்டு வருவார் என்றே எடுத்துரைக்கிறது. 

சுப்மான் கில் vs கேஎல் ராகுல்

மறுபுறம், சுப்மான் கில் (Shubman Gill) நம்பர் 3இல் விளையாட தொடங்கிய பின் நல்ல சராசரியுடன் விளையாடி வருகிறார். அவர் ஆஸ்திரேலியாவில் கடந்த சீசனிலும் விளையாடிய அனுபவம் இருக்கிறது. கேஎல் ராகுல் (KL Rahul) சமீபத்தில் பெரிய அளவில் இந்தியாவிலேயே சோபிக்கவில்லை. கிளாஸான வீரர் என்றாலும் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வது சற்றே ரிஸ்க்தான். சுப்மான் கில், ராகுல் ஆகியோருக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் அதேவேளையில் மூத்த வீரரான புஜாராவுக்கு (Cheteshwar Pujara) கடைசி சான்ஸ் ஒன்றை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்.

புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன?

ரஞ்சிக் கோப்பை தொடரில் (Ranji Trophy 2024-25) இன்னும் விளையாடி வருகிறார். தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினாலும் தற்போது ராஜ்கோட்டில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 234 ரன்களை குவித்து மீண்டும் தான் சோடைப்போகவில்லை என உலகத்திற்கு அறிவித்திருக்கிறார். ராஜ்கோட் அவரது சொந்த ஊர் என்பதால் அடித்துவிட்டார் என சொல்லலாம். இருப்பினும் சர்வதேச அளவில் விளையாட இன்னும் தனக்கு திறன் இருக்கிறது என்பதைதான் அவர் நமக்குச் சொல்ல வருகிறார். 

அதுவும் கில், ராகுல் ஆகியோர் நம்பர் 3 இடத்தில் விளையாடக்கூடியவர்கள். இவர்களே நிலையாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இந்த இடத்தில் புஜாரா வருவது அணிக்கு அனுபவத்துடன் பெரும் நம்பிக்கையையும் கொண்டுவரும். புஜாராவுக்கு ரஞ்சியில் மேலும் ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். இதே ராஜ்கோட்டில் ரயில்வே அணிக்கு எதிரான போட்டி வரும் அக். 26ஆம் தேதி தொடங்குகிறது. இங்கும் புஜாரா நம்பிக்கை அளிக்கும்பட்சத்தில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு அழைத்து ஒரு வாய்ப்பை வழங்கலாம். அங்கிருந்து அவரை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்லலாமா வேண்டாமா என்பதை ரோஹித் - கம்பீர் முடிவெடுத்துக்கொள்ளலாம். 

புஜாராவுக்கு 1 சதவீதம்தான் வாய்ப்பு

கில், ராகுல் ஆகியோரில் ஒருவரை மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எடுக்கலாம். நம்பர் 3 இடத்திற்கு புஜாரா ஓகே என்றால் மற்றொருவர் பேக்அப்பாக இருக்கலாம். இந்தியா ஏ அணியில் புஜாரா இல்லையே அப்போது எப்படி பிசிசிஐ அவரை அழைக்கும் என நீங்கள் கேட்கலாம்... அது சரியும் கூட... 

ஆனால் இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். புஜாராவை பிசிசிஐ அழைக்க வெறும் 1 சதவீதம்தான் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு அவரை எடுத்துச்செல்ல வேண்டும். ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வந்தாலும் அந்த நேரத்தில் சரியான வீரரை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | IND vs NZ: சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப்! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News