தாலிபான்கள் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்பு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இப்போது ஆப்கான் நாடு முழுவதும் தலிபான்களின் கடுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. திங்களன்று, கடைசி அமெரிக்க விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்த தாலிபான் போராளிகள், காற்றில் சுட்டு சுதந்திரத்தை கொண்டாடினர். கடைசி விமானத்துடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 வருட இராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது.
காபூல் விமான நிலையத்தில் இருந்து கடைசி அமெரிக்க விமானம் புறப்பட்டவுடன், விமான நிலையத்தின் வெளியே இருந்த தாலிபான் போராளிகள் உள்ளே வந்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. வானை நோக்கி, துப்பாக்கிகள் கொண்டு சுட்டும், பட்டாசுகளை வெடித்தும் அவர்கள் கொண்டாடினர். ஆப்கானிஸ்தானின் வானம் வண்ண ஒளியால் நிரம்பியது. இருப்பினும், ஆப்கான் பொது மக்களின் அச்சம் இன்னும் அதிகரித்துள்ளது. ஏனெனில் இப்போது அவர்கள் முற்றிலும் தாலிபான்களின் தயவில் இருக்கிறார்கள்.
அமெரிக்க ராணுவம் சில ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை காபூலில் விட்டுள்ளது. தாலிபான் போராளிகள் இந்த விமானங்களை ஆய்வு செய்வதைக் காண முடிந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறி விட்டதால், தாலிபான்களுக்கு மகிழ்ச்சியில் பித்து பிடித்தது போல் உள்ளது என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். துப்பாக்கிகளை சுட்டுக்கொண்டு விமான நிலையத்திற்குள் வந்தவர்கள், குழந்தைகளைப் போலவே, அமெரிக்க இராணுவத்தால் கைவிடப்பட்ட விமானங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தாலிபான்கள் வெளிநாட்டு படையினருக்கு 31 வரை காலக்கெடு விதித்தனர். பிரிட்டன் தனது மீட்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை முடித்தது. அமெரிக்க படைகள் திங்கள்கிழமை நாட்டை விட்டு வெளியேறின. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு உதவிய நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். இது தவிர, சுமார் 200 அமெரிக்கர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
காபூல் விமான நிலையத்தின் காட்சி முற்றிலும் மாறிவிட்டது. நேற்று வரை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் இருந்த இடத்தில், இன்று தாலிபான்கள் நிலைகொண்டுள்ளனர். ஆப்கான் பொதுமக்களின் கூட்டமும் விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளது. மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தாலிபான் ஏற்கனவே தடுத்து வருகிறது. இப்போது மக்கள் அங்கிருந்து வெளியேற வழியில்லை.
திங்கள்கிழமை இரவு, அமெரிக்காவின் கடைசி விமானம் காபூலில் இருந்து புறப்பட்டதாக மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி கூறினார். 'எங்களால் பலரை அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை. அதன் துயரம் எப்போதும் இருக்கும். எங்களுக்கு இன்னும் 10 நாட்கள் கிடைத்திருந்தால், நாங்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி இருப்போம். அதே நேரத்தில், விமான நிலையத்திற்கு வெளியே இருந்த தலிபான்கள் கடைசி அமெரிக்க விமானமும் சென்றதை அறிந்தவுடன், ஒரு கணத்தை கூட வீணடிக்காமல் உள்ளே நுழைந்தனர்.
தாலிபான் போராளிகள் முதலில் விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க இராணுவ விமானங்களை ஆய்வு செய்தனர். பின்னர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். நீண்ட நேரம், காபூல் முழுவதும் துப்பாக்கி சத்தம் எதிரொலித்தது. இது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகள் சுதந்திரத்தை கொண்டாட பட்டாசுகளை வெடித்தனர்.