கிரெடிட் கார்டில் பில்லிங் தேதியே யூசர்களே முடிவு செய்யும் புதிய வசதியை ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் வழக்கமான நடைமுறைப்படி, கிரெடிட் கார்டு மாதாந்திர பில் தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து அதிகபட்சமாக 15 நாள்களுக்குள் தாங்கள் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.
அதிலும், பெரும்பாலும், பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மாதக் கடைசியில் அமைந்துவிடுவதால் கிரெடிட் கார்டு பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, பெரும்பாலான பயனாளர்கள் அடுத்த மாதத் தொடக்கத்தின், முதல் வாரத்தில் சம்பளம் கிடைத்த பின்னரே, கிரெடிட் கார்டு பணத்தை திருப்பிச் செலுத்துவதை பார்க்க முடிகிறது. ஆனால், கால அவகாசம் தாண்டிவிடுவதால் வட்டியுடன் பணத்தை திருப்பிச் செலுத்தும் நிலைக்கு பயனாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
இதை தவிர்க்க புதிய வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. கிரெடிட் கார்டில் பயன்படுத்திய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளும் வசதி இதுவரை கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இனிமேல் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட தேதியில் பில்லிங் சைக்கிளை செட் செய்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டில் பயன்படுத்திய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து, 15 நாள்களுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். இது வங்கிகளை பொறுத்து மாறுதலுக்குட்பட்டது.
அந்தந்த வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டில் பயன்படுத்திய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விசா, ருபே, மாஸ்டர்கார்டு உள்பட பலவகை கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பம் போல, எந்தவகை கார்டு வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கும் வசதியும் விரைவில் வழங்கப்படவுள்ளது.