8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 8வது ஊதியக்குழுவில் உங்களுக்காக ஏகப்பட்ட அறிவிப்புகள் காத்திருக்கின்றன. முழு விவரத்தை இங்கே காணலாம்.
8th Pay Commission: இந்தியாவில் சுமார் 140 கோடி மக்கள் தொகை உள்ளது. தற்போது இவர்களில் 1 கோடி பேர் மத்திய அரசின் ஊழியர்களாகவோ அல்லது முன்னாள் ஊழியர்களாகவோ இருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் இவர்களுக்கு 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவுள்ளது. இதில் ஊதிய உயர்வு, ஒய்வூதிய உயர்வு ஆகியவற்றை தவிர இன்னும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 8வது உதியக்குழு மூலம் கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களது நிதி நிலை மற்றும் எதிர்காலத்தை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒரு ஊதியக் குழு தீர்மானிக்கிறது என்றும் கூறலாம்.
2014 ஆம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுவாக ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில், இதன் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் குறிப்பு விதிமுறைகள் (ToR) இறுதி செய்யப்படுவதற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனை இயந்திரம் (NC-JCM) ஊழியர்கள் தரப்பு, வரவிருக்கும் 8வது ஊதியக் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகளுக்கான (ToR) முன்மொழிவை பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு (DoPT) அனுப்பியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை குறிப்பு விதிமுறைகள் (ToR) முன்மொழிகின்றன. இதில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
ஊதிய மறுசீரமைப்பு: அனைத்து வகை ஊழியர்களுக்கும் ஊதிய அமைப்பை மதிப்பாய்வு செய்வதற்கான முன்மொழிவு உள்ளது. இதில் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்த, ஊதிய அளவுகளை இணைப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Aykroyd சூத்திரம் மற்றும் 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு முறையான மற்றும் கண்ணியமான குறைந்தபட்ச ஊதியத்தை குழு தீர்மானிக்க வேண்டும் என்று ToR -இல் குறிப்பிடப்பட்ட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை வலுப்படுத்தவும், நிதி பாதுகாப்பை வழங்கவும், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடனும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்.
ஓய்வூதிய சலுகைகள்: ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதிய சலுகைகளை திருத்துதல் மற்றும் ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீட்டமைத்தல் ஆகியவை இந்த பரிந்துரைகளில் அடங்கும். ஓய்வூதியத்தின் மாற்றப்பட்ட பகுதியை (கம்யூடட் பென்ஷன்) மீட்டெடுக்கும் காலம் தற்போது 15 ஆண்டுகளாக உள்ளது. இதை 12 ஆண்டுகளாக மாற்ற கோரிக்கை உள்ளது. மேலும், பணி ஓய்வுக்கு பிறகு, 65 வயது முதலே கூடுதல் ஓய்வூதியம் வழங்கத் தொடங்க வேண்டும் என்றும், அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் ஓய்வூதியம் (Additional Pension) அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதையும் ToR பரிந்துரைக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, பணமில்லாத, எளிய மருத்துவ சேவைகளை உறுதி செய்ய, CGHS வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை உள்ளது. இதுமட்டுமின்றி முதுகலை பட்டம் வரை குழந்தைகள் கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தை நீட்டிக்கவும் ToR -இல் பரிந்துரைக்கப்பட்ட்டுள்ளது.
தற்போது, 7வது சம்பளக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆகவும் உள்ளது. 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ரூ.36,000 ஆகவும், குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.18,000 ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.