தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கியில் கடன் வாங்கி கொண்டு திருப்பி கொடுக்காததால் அவர் மீது பண மோசடி வழக்கும் உள்ளது. அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும். அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் மல்லையா வங்கியில் கடன் வாங்கியது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோர்ட் உத்தரவுப்படி, மல்லையா தனது முழு சொத்து விபரத்தை வெளியிடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நிறுவனத்திடம் பெற்ற 40 மில்லியன் டாலர் விபரத்தை தெரிவிக்கவில்லை என கூறினார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, கடந்த மார்ச் மாதம் மல்லையா தாக்கல் செய்த சொத்து மதிப்பில், பிப்ரவரியில் பெற்ற பணம் குறித்த விபரம் இல்லை. கோர்ட் பல முறை ஆஜராக உத்தரவிட்டும் மல்லையா ஆஜராகவில்லை. எனவே அவர் மீது கோர்ட் கண்டன நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்லையா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இனிமேலும் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டியதில்லை என்றார்.
மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிஎஸ் வைத்யநாதன் கூறுகையில்:- சுப்ரீம் கோர்ட்டின் முன்னர் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்ய உள்ளோம். கோர்ட் உத்தரவை மீறவில்லை. சொத்து விபரத்தை வெளியிட வேண்டும் என்ற கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றியுள்ளோம் எனக்கூறினார்.
இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.