வந்தாச்சு பொது சிவில் சட்டம்... இன்று முதல் உத்தராண்டில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

Uniform Civil Code: இந்தியாவில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் அமலாகும் நிலையில், அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 27, 2025, 10:51 AM IST
  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது.
  • கடந்தாண்டு இதன் மசோதா உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்நிலையில், இன்று முதல் பொது சிவில் சட்டம் அங்கு அமலுக்கு வருகிறது.
வந்தாச்சு பொது சிவில் சட்டம்... இன்று முதல் உத்தராண்டில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? title=

Uniform Civil Code In Uttarakhand Latest News Updates: இந்தியாவில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் (ஜன. 27) அமலாகிறது. திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு, சொத்துரிமை ஆகியவற்றில் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான சட்டமே இனி உத்தரகாண்டில் பின்பற்றப்படும். உத்தரகாண்டை தொடர்ந்து கோவாவிலும் பொது சிவில் சட்டம் வர இருக்கிறது. 

கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம் ஆகும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்தாண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.

லிவ்-இன் உறவை பதிவு செய்ய வேண்டும்

இந்த பொது சிவில் சட்டத்தில் பல்வேறு முக்கிய கூறுகள் இருந்தாலும், லிவ்-இன் தம்பதியர்கள் தொடர்பான விதிகள் அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது, உத்தரகாண்டில் திருமணம் செய்துகொள்ளாமல், லிவ்-இன் உறவில் வாழும் தம்பதியர் கட்டாயம் தங்களது உறவு குறித்து பெற்றோர் சம்மதத்துடன் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

அதுவும் 21 வயதிற்கு மேற்பட்டவர்களே லிவ்-இன் உறவு குறித்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இது பொருந்தும் என்றும், அவர்கள் வெளிமாநிலம் சென்று லிவ்-இன் உறவில் வசித்தால் கூட இங்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த பொது சிவில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு -வின் குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்..!

லிவ்-இன் உறவை பதிவுசெய்யாவிட்டால் என்னென்ன தண்டனைகள்?

ஒரு தம்பதி தங்களின் லிவ்-இன் உறவை பதிவு செய்யாவிட்டாலும், தவறான தகவல்களை குறிப்பிட்டாலும் மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்படும். இல்லையெனில் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், இல்லையெனில் சிறை தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம். நீங்கள் ஒரு மாதம் தாமதமாக உங்களின் லிவ்-இன் உறவை பதிவு செய்தாலும் கூட மூன்று மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும்.

இரு பாலருக்கும் திருமண வயது என்ன?

அனைத்து மதங்களை சார்ந்த ஆண், பெண் இரு பாலருக்கும் திருமண வயது 21 தான். அதாவது 21 வயதினர்தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். இதன்மூலம், ஒருவர் உயர்கல்வியை முடிக்கவும், மாணவர்கள் திருமணம் நோக்கி செல்லாமல் தடுக்கவும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இவை மட்டுமின்றி, பலதார திருமணம், குழந்தை திருமணம் மற்றும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது ஆகியவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான சீரான நடைமுறை பின்பற்றப்படும். இருப்பினும், இந்த சட்டம் பட்டியல் பழங்குடியினருக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துரிமையில் மாற்றங்கள் என்ன?

ஒரு பெண்ணின் கணவர் உயிரிழக்கும்போதோ அல்லது அந்த பெண் விவாகரத்து பெறும்போதோ நிக்கா ஹலாலா மற்றும் இத்தாத் உட்பட இஸ்லாமிய சமூகத்தின் சில பிரிவினர் பின்பற்றும் நடைமுறைகளை இந்த பொது சிவில் சட்டம் தடை செய்கிறது. அதேபோல், பரம்பரை உரிமைகளின் அடிப்படையில் பல்வேறு சமூகங்கள் இடையே சமத்துவத்தை உறுதி செய்வதையும் பொது சிவில் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேரடி உறவுகளில் இருந்து பிறக்கும் குழந்தைகளையே 'தம்பதியினரின் சட்டப்பூர்வமான குழந்தை' என்று பொது சிவில் சட்டம் அங்கீகரிக்கிறது. அவர்களுக்கு மட்டுமே பரம்பரைச் சொத்தில் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஆண், பெண் இருவரையும் பாலின பேதமின்றி 'குழந்தை' என்ற பொதுப்பெயரில்தான் இச்சட்டம் குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க | Union Budget 2025: வருமான வரி சட்டத்திற்கு பதிலாக... புதிய சட்டம் அமலாகிறதா... முழு விபரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News