இந்தியாவின் கனவு பயணம்... சந்திரயான் திட்டங்கள் கடந்து வந்த பாதை!

Chandrayaan 3: கடந்த 2019ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 திட்டம் அதன் இலக்கை எட்டாமல் தோல்வியடைந்ததை அடுத்த சந்திரயான்-3 இன்று ஏவப்படுகிறது. இந்தியாவின் நீண்ட இந்த நிலவுப் பயணம் குறித்த முழு பின்னணியை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2023, 11:10 AM IST
  • 2009இல் சந்திரயான்-1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகண்டது.
  • சந்திரயான்-2 தோல்வியடைந்ததை அடுத்து, சந்திரயான்-3 அதேபோன்று உருவாக்கப்பட்டது.
  • சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்குவதுதான் சந்திரயான்-3 திட்டத்தின் நோக்கம்.
இந்தியாவின் கனவு பயணம்... சந்திரயான் திட்டங்கள் கடந்து வந்த பாதை! title=

Chandrayaan 3: இந்தியாவின் நிலவுப் பயணத்தின் மூன்றாவது பதிப்பான சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதை அடுத்து, இந்திய விஞ்ஞானிகள் தற்போது அதிகம் எதிர்பார்ப்பில் உள்ளனர். பல ஆண்டுகளாக தொடரும் இந்த நாட்டின் நிலவுப் பயணம் எவ்வாறு உருவானது என்பதை இங்கே காணலாம்.

சந்திரயான்-1

சந்திரயான் திட்டம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதாவது, 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயால் முறையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இஸ்ரோவின் நம்பகமான பிஎஸ்எல்வி-சி 11 ராக்கெட்டில் சந்திரயான்-1 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்டபோது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎஸ்எல்வி-சி11 என்பது பிஎஸ்எல்வியின் நிலையான கட்டமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். தூக்கும் போது 320 டன் எடை கொண்ட இந்த வாகனம் அதிக பேலோட் திறனை அடைய பெரிய ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்களைப் பயன்படுத்தியது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பல்கேரியாவில் கட்டப்பட்ட 11 அறிவியல் கருவிகளை இது எடுத்துச் சென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-1 திட்ட இயக்குநராக செயல்பட்டு இந்தத் திட்டத்தை வழிநடத்தினார்.

மேலும் படிக்க | சந்திரயான்-3 விண்கலம்: கவுண்ட் டவுன் தொடக்கம்

இலக்கை அடைந்த சந்திரயான்-1

சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட-புவியியல் வரைபடத்திற்காக சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ., உயரத்தில் சந்திரனைச் சுற்றி விண்கலம் சுற்றிக் கொண்டிருந்தது. சந்திரயான் -1 செயற்கைகோள் அதன் அனைத்து நோக்கங்களையும் அடைந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்திரயான் -1 விண்கலத்தின் சுற்றுப்பாதை 200 கி.மீ., மேல் நிறுத்தப்பட்டது.

இஸ்ரோ குழு எதிர்பார்த்ததை விட, செயற்கைக்கோள் சந்திரனைச் சுற்றி 3 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்கியது, மேலும், 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கலத்தில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து, அதன் பணி நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பிஎஸ்எல்வி-சி 11 ராக்கெட்டை வடிவமைத்து உருவாக்கியது.

சந்திரயான்-2

சந்திரயான்-1 வெற்றியால் பெற்ற உற்சாகத்தில் சந்திரயான்-2, நிலவின் ஆராயப்படாத தென் துருவத்தை ஆராய்வதற்காக ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) ஆகியவற்றை எடுத்துச் சென்றதால், இஸ்ரோவால் மிகவும் சிக்கலான பணியாக கருதப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி அன்று சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செருகப்பட்டது.

லேண்டரில் பிரச்னை

சந்திர மேற்பரப்பில் தரையிறங்குவதற்குத் தயாராகும் வகையில் ஆர்பிட்டரில் இருந்து 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டதால் விண்கலத்தின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாக இருந்தது. 100 கிமீ உயரத்தில் சந்திரனைச் சுற்றிய பிறகு, லேண்டரின் இறங்குதல் திட்டமிட்டபடி இருந்தது மற்றும் 2.1 கிமீ உயரம் வரை அது சாதாரணமாக இருந்தது. இருப்பினும், விக்ரம் லேண்டரிடம் விஞ்ஞானிகள் தொடர்பை இழந்ததால் இந்த பணி திடீரென இலக்கை எட்டாமல் முடிவுக்கு வந்தது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை மறைந்த விக்ரம் சாராபாயின் பெயரில் அந்த லேண்டருக்கு விக்ரம் என பெயரிடப்பட்டது.  

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விரும்பிய தரையிறக்கத்தை அடையத் தவறியதால் இஸ்ரோ குழு ஏமாற்றமடைந்தனர். இந்த அரிய சாதனையைக் காண இஸ்ரோ தலைமையகத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்ட அப்போதைய இஸ்ரோ தலைவர் கே.சிவனை ஆறுதல்படுத்திய படங்கள் இன்னும் பலரது நினைவில் பசுமையாக இருக்கின்றன.

நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய புதிய புரிதலுக்கு வழிவகுத்த நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம அடையாளம் மற்றும் அதன் விநியோகம், மேற்பரப்பின் இரசாயன கலவை மற்றும் மேல் மண்ணின் வெப்ப-இயற்பியல் பண்புகள் ஆகியவற்றின் விரிவான ஆய்வு மூலம் சந்திரயான் 2 பணியானது நிலவின் அறிவியல் அறிவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இன்று ஏவப்பட உள்ள சந்திரயான்-3, சந்திரயான்-2 திட்டத்தை பின்தொடர்கிறது, இது சந்திரனின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தில் தேர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கினால், அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா மாறும்.

மேலும் படிக்க | இஸ்ரோவின் லட்சிய கனவு நிறைவேறுமா? இந்த முறை மிஸ் ஆக வாய்ப்பில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News