மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது!
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் நிலையில், அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவ்விரு மாநிலங்களிலும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “தேர்தல் அறிவிப்புகளை வரவேற்கிறோம். தேர்தல்களை சந்திக்க தயாராக உள்ளோம். வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகள் அடிப்படையில் நாங்கள் இந்த தேர்தல்களை எதிர்கொள்வோம். அரசாங்கம் எந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறதோ, அந்த உண்மையான பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி முழு பலத்தோடு எழுப்பும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய தலைநகருக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேச பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி எழுப்பும் என்றும் பவன் கெரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதன் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதும் மக்களின் உண்மையான பிரச்சினைதான் எனவும் அவர் குறிப்பிட்டார். ஆயுள் காப்பீட்டு நிறுவனம் LIC-யின் நிதியை, கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் பொதுத்துறை நிறுவனங்களில், வங்கிகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் கூறி அவர் மத்திய அரசை விமர்சித்தார்.
தேர்தலை பொறுத்தமட்டில், மகாராட்டிர மாநிலத்தின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், ஹரியானாவில் முதல்வராக மனோகர்லால் கட்டார் ஆகியோர் உள்ளனர். இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.