சென்னையில் 2000 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக அமைத்துள்ள கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம.சரவணனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேதாரண்யத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனும் பங்கேற்றார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, வேதாரண்யத்துக்கான திட்டங்களைப் பட்டியலிட்டார்.
திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், அதிமுக கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை இதுவரை நிறைவேற்றியதே இல்லை என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்து விளங்குவதாகவும், விருதுகளை குவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதன்மையானதாக இருப்பதாகவும், இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழகம் தான் என்றும் அவர் கூறினார்.