ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் சாதிய ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 16, 2022, 07:33 PM IST
  • தமிழக அரசை வலியுறுத்திய சீமான்
  • தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் ஆணவ கொலைகள்
ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - சீமான் வலியுறுத்தல் title=

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, ‘சாதிய ஆணவப்படுகொலை’ என்றே பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலையென்றுகூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல.

மேலும் படிக்க | செத்தா தூக்கிப்போட யாரு இருக்கா? - 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தானே கல்லறை கட்டிய பாட்டி பலி!

18 வயதினைப் பூர்த்திசெய்த எவரும் மனமொத்து திருமணம் செய்துகொள்வதற்கு சட்டமும், சனநாயக அமைப்பு முறைகளும் வழியேற்படுத்தி இருக்கிற நிலையில், சாதியின் பெயரால் நடக்கிற கோரமான இத்தகைய ஆணவக்கொலைகள் கடும் கண்டனத்திற்குரியவையாகும். அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சிபெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வருகிற 21 ஆம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் நடக்கிற படுகொலைகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன. 

பிறப்பின் வழியே பேதம் கற்பித்து, மானுடச்சமூகத்தைப் பிளந்து பிரிக்கிற சாதி எனும் வருணாசிரமக்கட்டமைப்பை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. மனித மனங்களில் புரையோடிப் போயிருக்கிற சாதி எனும் சமூகப்புற்றால் நிகழ்ந்தேறும் வன்முறைகளும், தீண்டாமைக்கொடுமைகளும், ஆணவப்படுகொலைகளும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இவற்றை சட்டத்தின் துணைகொண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் தார்மீகக்கடமையும், சமூகப்பொறுப்புமாகும்.

மேலும் படிக்க | எந்த அறிகுறி இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் - சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

ஆகவே, கும்பகோணம் தம்பதிகளான சரண்யா – மோகன் மரணத்திற்குக் காரணமான கொலைகளைக் கடுஞ்சட்டத்தின் கீழ் பிணைத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News