சென்னை: சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை நேற்று கவர்னர் தலைமையில் பொறுப்பேற்றனர்.
பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுப் புரட்சியைப் போல் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து மெரீனா கடற்கரையில் பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் போராட்டம் நடக்கப் போவதாக பரவிய செய்தி எதிரொலியால் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடற்கரை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போராட்டம் என சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.