இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (பிப்.06) தொடங்கி 12ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறார்.
விராட் கோலி இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13906 ரன்களை 58.15 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 50 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் அவரிடமே உள்ளது.
மாபெரும் சாதனை படைக்க இருக்கும் கோலி
கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிகளில் குறைந்த இன்னிங்ஸில் 10000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை பெற்றார். அதேபோல் தற்போது அவர் 94 ரன்களை எட்டும் பட்சத்தில் 14000 ரன்களை குறைந்த இன்னிங்ஸில் எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.
மேலும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர்: ரிஷப் பண்ட்டிற்கு இடம் இருக்கா? பிளேயிங் 11 இதோ!
இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே 14000 ரன்களை எட்டியவர்களாக உள்ளனர். ஒன்று சச்சின் டெண்டுல்கர் மற்றொருவர் குமார் சங்ககரா. இவர்கள் இருவருமே 350 இன்னிங்ஸ்களுக்கு மேல் தான் இந்த 14000 ரன்களை எட்டினர். தற்போது விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 94 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 298 இன்னிங்ஸிலேயே 14000 ரன்களை எட்டி விடுவார்.
இங்கிலாந்து எதிரான தொடரிலாவது ஃபார்மிற்கு திரும்புவாரா?
விராட் கோலி தற்போது சரியான ஃபார்மில் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம் விளாசி இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சருக்குகளை கண்டார். இதனைத் தொடர்ந்து ஃபார்மை மீட்டெடுக்க ரஞ்சி போட்டியில் விளையாடினார். ஆனால் அங்கும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வரவுள்ள நிலையில், விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலாவது ஃபார்மிற்கு வந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் உள்ளனர்.