கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.
எவின் லீவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது லீவிஸ் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷாய் ஹோப் உடன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார்.
ஷாய் ஹோப் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 33 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சேஸ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் 31.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். கடைசி ஐந்து ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ரன்கள் குவித்தது. நவ்தீப் சைனி வீசிய 46-வது ஓவரில் பூரன் 3 பவுண்டரி விளாசினார்.
கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு துரத்தினார் பொல்லார்டு. இந்த ஓவரில் 16 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.