இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்!!
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பெண் தலைவர்களில் முதன்மையானவராகவும் இருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 67 வயதான அவர், நீண்ட நாட்களாக சிறுநீரக கோளாரால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மாவின் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குவிந்துள்ள அரசியல் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்பிறகு கட்சியினர் மரியாதை செலுத்துவதற்காக சுஷ்மா சுவராஜின் உடல் நண்பகல் 12 மணி அளவில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
PM மோடி....
இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது என சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுச்சேவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும் அவரது மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது என்றும் டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர், இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி....
சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா....
சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு.
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.....
சுஷ்மா சுவராஜ் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு. எளிய மக்களுடன் அன்புடன் பழகும் தலைவராக திகழ்ந்தவர்; அவருடைய மறைவால் மிகப்பெரிய ஆளுமையை இழந்திருக்கிறோம்.
காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்...
'சுஷ்மா சுவராஜ் கண்ணியமான நாடாளுமன்றவாதி' நல்ல நாடாளுமன்றவாதி எப்படி திகழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் சுஷ்மா சுவராஜ்.
MK ஸ்டாலின்.....
தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழிசை.......
பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ்; ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர்
கனிமொழி....
ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர் என்றும், கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் என்றும் புகழாரம்...
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்...
சுஷ்மா சுவராஜின் மறைவு இந்திய அரசியலுக்கு இழப்பு. சுஷ்மா சுவராஜ் மிகச்சிறந்த பேச்சாளர்; அறிவுப்பூர்வமான உரைகளை நிகழ்த்தியவர்.