TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெரும் திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Nadu Budget 2025: திமுக 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்று 2021-22, 2022-23, 2023-24 ஆகிய முதல் மூன்று பட்ஜெட்டை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். அமைச்சரவை மாற்றத்திற்கு பின் 2024-25 பட்ஜெட்டை தங்கம் தென்னரசு (TN Finance Minister Thangam Thennarasu) தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக தங்கம் தென்னரசு 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் (TN Budget 2025) விரைவில் கூட உள்ளது. இன்னும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் திமுக அரசு (Tamilnadu Government) என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடும் என பல்வேறு தரப்பில் எதிர்பார்ப்பு இருக்கின்றன.
ஏனென்றால், வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் (TN Assembly Election 2026) நடைபெற இருப்பதால் இதுவே இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும்.
அப்படியிருக்க, இந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் (TN CM MK Stalin) 110 விதியின்கீழ் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும், எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு பிப்.19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் (TN Budget Session 2025) வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 2 மாதங்கள் வரை நீளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றம் குறைவான நாள்களே கூடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கும் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் தொடங்கி மே மாதம் வரை நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி, இதுவரை தற்போதைய திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள், துறை சார்ந்த நடவடிக்கைகள், செயல்பாடுகள் என அனைத்தையும் முழுவதுமாக சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கூட்டத்தொடர் இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய அறிவிப்புகள் மட்டுமின்றி ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முழுவதுமாக அவையில் முன்வைப்பதன் மூலம், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலையை இந்த பட்ஜெட்டில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
India Today கருத்துக்கணிப்பில் 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னரும் திமுகவுக்கு தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அரசுக்கு எதிரான மனநிலையை (Anti-Incumbency) மேலும் குறைக்கும் பொருட்டு, பட்ஜெட்டின் மூலம் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டவை என்ன என்பதை முழுவதுமாக மக்கள் மன்றத்தில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.