BP Control Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் என்பது பலருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கு வழி வகுக்கும் என்பதால் அலட்சியம் கூடாது.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்களில் முக்கியமானது. இந்நிலையில் பொட்டாஷியம் நிறைந்த பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பொட்டாசியம் என்னும் எலக்ட்ரோலைட் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. பொட்டாசியம் சத்து இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், இதன் காரணமாக இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் ஆபத்து அதிகரிக்கும்.
பிபியை கட்டுப்படுத்தும் பழங்கள்: பொட்டாசியம் இரத்த அழுத்தத்தில் சோடியத்தினால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது. இதனால் உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உயிரணுக்களிலிருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. இந்நிலையில், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய பொட்டாஷியம் நிறைந்த பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்: ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் பலவீனம் நீங்கும். 100 கிராம் வாழைப்பழத்தில் 358mg பொட்டாசியம் உள்ளது. எனவே இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதய தமனிகளை ஆரோக்கியமாக வைத்து, உயர் இரத்த அழுத்தம் போன்ற இதயம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
கொய்யா: 1 கப் கொய்யாவில் 688mg பொட்டாசியம் உள்ளது. இதன் காரணமாக, தமனிகள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் மேம்படும். பொட்டாசியம் தாது ஆரோக்கியமான இதயத்திற்கும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து உயிரணுக்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இயக்கத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
கிவி பழம்: 1 கப் கிவியில் தோராயமாக 562mg பொட்டாசியம் உள்ளது. அதாவது 100 கிராமுக்கு 312 மி.கி பொட்டாசியம். எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, இந்தப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடலின் செல்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆரஞ்சு: ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆற்றலை வழங்கி, புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பொட்டாசியம் சத்தின் ஆதாரமாகவும் இருக்கின்றன. ஒரு நடுத்தர ஆரஞ்சு பழத்தில் சுமார் 240 மி.கி பொட்டாசியம் உள்ளது. எனவே, பிபி இருந்தால் உணவில் காடாயம் ஆரஞ்சு பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவகேடோ: அவகேடோவில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் தாது உங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் உள்ள நரம்புகளை தூண்டி அதனை ஆக்டிவேட் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நரம்பு தூண்டப்படுவதால் தசைகள் நன்றாக விரிந்து சுருங்கி, அதன் மூலம் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.