Pension | இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம் விண்ணபிப்பது எப்படி, தகுதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Senior Citizen Pension | மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் எப்படி சேருவது, அதற்கான தகுதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
"இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (NSAP - Indira Gandhi National Old Age Pension Scheme)" என்பது தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) ஐந்து துணைத் திட்டங்களில் ஒன்றாகும். IGNOAPS இன் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மற்றும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 79 வயது வரை ₹ 200 பெறுவார்கள். அதன் பிறகு ₹ 500 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவார்கள்.
இந்திய அரசு, ஆகஸ்ட் 15, 1995 அன்று, தேசிய சமூக உதவித் திட்டத்தை (NSAP) மத்திய அரசி நேரடி முழு பங்களிப்பு திட்டமாக அறிமுகப்படுத்தியது. இது நாடு முழுவதும் இருக்கும் ஆதரவற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
குடிமக்களின் போதுமான வாழ்வாதாரத்தை உறுதி செய்தல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.
இந்த திட்டம் முதுமையின் போது ஏழைக் குடும்பங்களுக்கு தேவையான சமூக உதவி சலுகைகளை வழங்குவதாகும். நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு தடையின்றி ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இலக்காக கொண்டுள்ளது.
தகுதியுள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (BPL) நபர்களுக்கும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். 2007 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (BPL) அனைத்து தகுதியுள்ள நபர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தகுதி : விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 வயதுடையவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை ; ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். அதாவது UMANG செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது https://web.umang.gov.in/web_new/home என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தளத்துக்குள் சென்றவுடன் மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். பின்னர், NSAP ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில், “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும். அடிப்படை விவரங்களை நிரப்பி, ஓய்வூதியம் செலுத்தும் முறையைத் தேர்வுசெய்து, புகைப்படத்தைப் பதிவேற்றி, “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்யவும்.
முறையாக நிரப்பப்பட்டு சுய சான்றளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம், இருப்பிடச் சான்றிதழ், குடியிருப்புச் சான்று (வாக்காளர் அட்டை/ மின்சார ரசீது/ ஆதார் அட்டை), வயதுச் சான்று (கடைசியாகப் படித்த பள்ளி அல்லது நகராட்சி அதிகாரி அல்லது SHO அல்லது மருத்துவ வாரியம் மூலம் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்), ஆதார் எண், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகளின் வேறு எந்தவிதமான ஓய்வூதிய திட்டத்திலும் பயனாளியாக இல்லை என்பதற்கான சான்றையும் இணைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.