எலான் மஸ்க் நிறுவனத்துக்கு போட்டியாக ஜியோ நிறுவனம் சாட்டிலைட் இண்டர்நெட் சேவையை இந்தியாவில் கொடுக்க இருக்கிறது.
சாட்டிலைட் இண்டர்நெட் இந்தியாவில் தொடங்கலாம் என்ற கனவில் எலான் மஸ்க் இருந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுத்துள்ளது.
எலான் மஸ்க் நிறுவனமான ஸ்டார் லிங்க், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சாட்டிலைட் இண்டர்நெட் சேவையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த சேவையை தொடங்க மஸ்க் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் குழுமம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இண்டர்நெட் சேவையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியான சாட்டிலைட் மூலம் இண்டர்நெட் சேவை கொடுக்கும் திட்டத்தை எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சேவை இந்தியாவிலும் கொடுக்க அவர் பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இந்த சூழலில் இதற்கான அனுமதியை இந்தியாவின் டெலிகாம் துறையின் ஜாம்பவானாக உருவெடுத்திருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் பெற்றுள்ளது. ஸ்டார்லிங்க் போன்ற இணைய சேவையை தொடங்க ஜியோ முயன்று வருவதாக ஏற்கனவே ஆகாஷ் அம்பானி அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முகேஷ் அம்பானியின் சாட்டிலைட் இண்டர்நெட் சேவைக்கு இப்போது ஒப்புதல் கொடுத்திருக்கின்றனர்.
லக்சம்பர்க்கின் எஸ்எஸ்இ நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இணைந்து இந்த சேவையை கொடுப்பதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்திருக்கிறது. இந்திய விண்வெளித்துறையும் இதற்கான பச்சைக்கொடியை காட்டியிருக்கிறது.
சாட்டிலைட் உதவியுடன் ஜிகாபைட் பைபர் இண்டர்நெட் சேவையை கொடுக்கும் நடவடிக்கைகளில் ஜியோ ஈடுபட்டுவருகிறது. எலான் மஸ்கைப் போலவே அமேசான் நிறுவனமும் சாட்டிலைட் மூலம் இணைய சேவையை இந்தியாவில் கொடுக்க முயற்சி செய்தது. அந்த நிறுவனத்துக்கும் மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் இன்னும் பல அனுமதிகளை இது தொடர்பான சேவைகளுக்கு ஜியோ இன்னும் பெற வேண்டியிருக்கிறது. இருப்பினும் இன்னும் சில மாதங்களில் ஜியோவின் விண்ணப்பங்களின் அடிப்படையில் அனுமதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.